'வேட்டைத் துணைவன் - 8’                     

  


 


Poligar hound – பகுதி 3


1963 ஆம் ஆண்டு “The Indian Dog” என்ற புத்தகத்தை எழுதிய W. V. Soman ( வேறு வழியே இல்லை நமக்கு ! சில இடங்களில் அதை பரிசீலித்தும், சில இடங்களில் முரண்பட்டும், பல இடங்களில் உடன்பட்டும்தான் நாம் நகர வேண்டியதுள்ளது ) புத்தகத்தில் poligar hound என்ற தலைப்பிலும் கட்டுரை எழுதியுள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னான இருபது ஆண்டுகளில் poligar hound கள் பற்றி கட்டுரை எழுதியவர்கள் ( ஏன் இந்திய நாய் இனங்கள் பற்றி என்று கூடச் சொல்லாம் ) ரெண்டே ரெண்டு பேர் தான். ஒருவர் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இந்தியாவின் முன்னோடி காட்டுயிர் புகைப்பட கலைஞர் மா. கிருஷ்ணன். மற்றொருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த W. V. Soman.



மா.கிருஷ்ணன்


சோமனுடைய கட்டுரையில் கவனிக்க வேண்டியதென்னவென்றால் அப்புத்தகத்தில் இராஜபாளையம் பற்றிய கட்டுரையும் உண்டு என்ற போதும் பொலிகர் ஹௌண்டும் ராஜபாளையமும் ஒன்று என்றோ ரெண்டும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதுதான். அதே வேளையில் polygar hound கள் சுத்தமான வெள்ளை நிறம் அல்ல. அவற்றின் முட்டுகள் மற்றும் காது மடல்கள் “pink”  நிறத்தன்மையுடன் காணப்படும். இவை பன்றி வேட்டைக்குப் பயன்படுத்தப் பட்டது. இவற்றுக்கு “ரோமன் நோஸ்” உண்டு என்றும் பதிவு செய்திருக்கிறார். மூக்கு நுனிக்கு மேலே உள்ள பகுதி மேடாக அமைந்தால் அதற்கு ரோமன் நோஸ் என்று பெயர். மனிதர்களுக்கு அப்படி அமைவது போலவே நாய்களுக்கும் அமையும். இந்திய நாயினங்களில் roman nose உள்ள நல்ல உதாரணங்களில் சில “முதோல் ஹவுண்ட்” களில் உண்டு. அவற்றில் வெள்ளை நிறமும் உண்டு (சந்தேகமே வேண்டாம் “க்” தான் வைத்திருக்கிறேன். பின்னர் அவசியம் அங்கு வருவேன்)


போகப்போக  நல்ல பொலிகர் நாய்களை எடுக்க பற்றாக்குறை ஏற்பட்டதால் இதில் in – breeding ( ஒரே  ஈற்றில் பிறந்த குட்டிகளுடனோ நெருங்கிய ரெத்த தொடர்புடையவற்றுடனோ நாய்களை இணை சேர்த்து குட்டிகளை எடுப்பதுதான் in breeding.  அறியாமையாலும் பணம் கிடைக்கிறது என்பதாலும் இவை இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது ) செய்யப்படுகிறது என்பது வரை சொல்லி முடிவில் ஒரே போடாக இவ்வகை நாய்கள் இராஜபாளையத்தில் காணக் கிடைக்கும் என்கிறார்.


ஆக W. V. Soman, poligar hound கள் ஒரு தனித்த இனமென்று நினைத்திருக்க வேண்டும் அல்லது பலவாறான குறிப்புக்கள் மூலம் இறுதியாக ஒன்றை வரையறுத்துச் சொல்வதில் குழம்பி இருக்க வேண்டும். ( அதே புத்தகத்தில் ராஜபாளையம் நாய்களைப் பற்றி எழுதி பொலிகர் பற்றி ஒரு வரி சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்க ). இந்தக் குழப்பம் ஏதோ ஒரு புள்ளியில் தெளிவடைந்தது அல்லது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. நிச்சியம் சோமனால் அல்ல.




 


கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இராஜபாளைய நாய் என்றால் பொலிகர் ஹவுண்ட் என்ற கருத்தை தொடர்ந்து எல்லாரும் எழுத காரணமானவர் மா. கிருஷ்ணன். 1954 ஆம் ஆண்டு “கலைமகள்” இதழில் வெளியான மா. கிருஷ்ணனின் “ராஜபாளையம் நாய்” என்ற தலைப்பிலான கட்டுரை மிக முக்கியமான ஒன்று என்று முந்தய கட்டுரை ஒன்றில் சொன்னேன் அல்லவா ! அதிலுமே கூட இவைதான் பொலிகர் ஹவுண்ட் என்று குறிப்பிடவில்லை. சொல்லப்போனால் 1950 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஒரு பத்தியில், “ நான் ஒரு poligar குட்டி வளர்த்தேன், அது 500 மைல் தொலைவில் இருந்து என்னை வந்தடைந்தது. அது 22 இன்ச் உயரம் கொண்டது.  அதன் பெயர் சொக்கி” என்று சொன்னாரே தவிர , அதன் நிறம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை – இராஜபாளையமா என்பதை அறிய நிறம்  அவசியமாயிற்றே!  ( *ராஜபாளையமாகவே கூட இருக்கலாம் என்பது வேறு கதை. ஆனால் poligar என்று குறிப்பிட்டவர் அந்தப் பத்தியில் வேறு எங்கும் அதை ராஜபாளையம் என்று குறிப்பிடவில்லை)


கிட்டத்தட்ட அதற்க்குப் பின்னான இருபது ஆண்டுகளில் ஒருவர் கூட இராஜபாளையமும் poligar ஹவுண்ட்களும் ஒன்று எனச் சொன்னது கிடையாது. எண்பதுகளின் தொடக்கத்தில் தான் முதல் முறையாக மா. கிருஷ்ணன், “poligar hound” களும் “இராஐபாளைய நாய்களும்” ஒன்று என பதிவு செய்கிறார். ஆந்திர – கர்நாடகப் பகுதிகளில் உள்ள பரிச்சயமும் அது போன்ற இடங்களில் உள்ள நாய்களைக் கவனிக்கும் இயல்பான ஆர்வமும், வாசிப்பும், இராஜபாளைய நாய்களின் தெலுங்கு தேசப் பூர்விகமும் குறித்த வரலாற்று வரலாற்று அறிவும். இந்தத் திருத்தமான முடிவுக்கு அவரைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.


அதே காலகட்டத்தில் காட்டுயிர் ஆர்வலர் தியோடர் பாஸ்கரனும் இதே கருத்தை திருத்தமாகச் சொல்ல.. poligar hound என்ற பெயர் ராஜபாளைய நாய்களுக்கு மட்டும் தங்கிப்போனது ( 2017 வெளியான The book of indian dogs  புத்தகத்தில்,  மா. கிருஷ்ணணின் சொக்கியை இராஜபாளையம் என்று தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார் – poligar hound தான்  ராஜபாளையம் என்றான பிறகு சொன்னது அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்) அதுவே இன்றுவரையிலும் ஏன் இனிமேலும் தொடவிருக்கிறது. உண்மையில் மா. கிருஷ்ணனுடைய கண்டடைவு ஓர் மிகப்பெரிய திறப்புத்தான். அதே வேளையில் “poligar hound” என்ற பெயருக்குள் இராஜபாளைய நாய்களின் மூதாதையர்களும் அடக்கமே தவிர இவை மட்டுமே poligar hound கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.


Poligar hound பகுதி 1.2 மற்றும் 3 ஆகியவற்றில் உள்ள முக்கியக் கூறுகளை சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால்,


Poligar என்பது பாளையக்காரர்களைக் குறிக்க பிரித்தானியர்கள் பயன்படுத்திய பெயர். போக poligar கள் வளர்த்த நாய்களை poligar hounds என்றே பிரித்தானியர்கள் வழங்கினார். சிக்கல் என்ன வென்றால் poligar களிடம் ஒரு வகை மட்டுமே இருந்ததில்லை. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களுக்கு பொதுவாக poligar hound என்ற ஒரே ஒரு பெயர்தான் இருந்தது.


சரி, இனி அடுத்த கட்டமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது. Poligar hound களில் உள்ள ரெண்டு முக்கிய வேறுபாட்டை. அவற்றில் ஒன்று greyhound வகை நாய்கள் மற்றோன்று நல்லதலைக் கட்டும் உடல் கட்டும் கொண்ட நாய்கள். இவற்றில் greyhound வகை நாய்கள் தான் poligar hound கள் என்று சொல்லும் தொகையான தகவல்களில் இருந்து கன்னி நாய் பற்றிய வரலாறையும். Poligar hound கள் நல்ல உடல் கட்டு கொண்டவையே என்று சொல்லும் தரவுகளில் இருந்து இராஜபாளைய நாய்களின் வரலாற்றையும் நாம் அறியவிருக்கிறோம்.