சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது. 


இந்தியாவில் பாதிப்பு:


இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாமல் இருப்பது ஏற்படுகிறது.


சர்க்கரை நோய் வந்தால் கூடவே சரும வியாதிகளும் வரலாம்.  நீரிழிவு நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும், அதனால் ஏற்படும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதையும் காணலாம்.


அதற்கான அறிகுறிகள் இதோ..


1. சருமத்தில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு நிற பேட்ச்கள்


சரும பாதிப்பு சிறிதாகவே ஆரம்பிக்கும். முதலில் சிறு கட்டிகளாக உருவாகும். பின்னர் இவை தடிப்புகளாக மாறும். இது மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் தடிப்புகள் உண்டாகும். டைப் 2 டயபெட்டீஸ் உள்ள பல்ருக்கும் இந்த வகை சரும பாதிப்பு ஏற்படுவது இயல்பு.


2. தோல் தடித்தல்


கால்விரல்கள், கைவிரல்களில் தோல் தடிக்கும்.  இதனை டிஜிட்டல் ஸ்க்லராஸிஸ் எனக் கூறுகிறார்கள். கைகளில் இறுக்கம், மினுமினுப்பு ஏற்படும். விரல்கள் இறுக்கமாகும். அதை அசைப்பது கடினமாகும். பல ஆண்டுகளாக சர்க்கரை நோயை மோசமாகப் பராமரித்தால் இவ்வாறு நடக்கும். முதுகு, தோள்பட்டை, கழுத்துப் பகுதியிலும் இதுபோன்ற தோல் தடித்தல் ஏற்படும்.


3. புண்கள் ஆறுவது தாமதமாதல்


சர்க்கரை கட்டுப்பாடு இல்லாமல் செல்லும்போது புண்கள் ஆராமல் போகும். சர்க்கரை நோயினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ரத்த ஓட்டம் குறையும். தொற்றுகள் ஏற்படும். அதனால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம்.


4. கொப்புளங்கள்


பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு மூட்டுக்களில், கை மற்றும் கால் விரல்களில் கொப்புளங்கள் தோன்றும்.பெரும்பாலான கொப்புளங்கள் வலியில்லாதவையாக இருக்கும்.  இவை தவிர டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறியாக விடிலிகோ ஏற்படுகிறது என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தோலில் நிறத்தை அளிக்கும் செல்கள் சேதமடைந்து வெண்ணிற திட்டுக்கள் ஏற்படுகின்றன.


பொதுவாக, itching என்று கூறப்படும் அரிப்பு மிக மிக பொதுவான பிரச்சனை தான், பல நேரங்களில் இது ஒரு பிரச்சனை கூட இல்லை; இருந்தாலும், ஆரம்ப கால நீரிழிவு அறிகுறியாக, அரிப்பு மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மற்றும் பாதங்களில் அதிக அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.


நீரிழிவு நோயின் அறிகுறி என்று ஆணித்தரமாக உறுதி செய்வது காலில் ஏற்படும் புண். நீரிழிவு நோயால் கால் நரம்பு சேதமடையும் மற்றும் ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். சிறிய புண் அல்லது கீறல் ஏற்பட்டால் கூட, ஆறாமல் அப்படியே இருக்கும்.


எனவே சர்க்கரையை கட்டுக்குள் வையுங்கள் சந்தோஷமாக இருங்கள்.