நீங்கள் எப்போதாவது ஹாஸ்டலில் இருந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்தச் செய்தியின் ஒவ்வொரு வரியையும் உங்களால் ரசித்து வாசிக்க முடியும். இது ஹாஸ்டல் வாழ் பெண்மணியின் அனுபவப் பகிர்வு.


ஹாஸ்டலில் வசிக்கும் பெண் ஒருவர் அவரது நண்பரிடம் எனக்கு ஹாஸ்டல் உணவு பிடிக்கவே இல்லை. நான் எனது வீட்டு உணவை ரொம்பவே மிஸ் பண்றேன் என்று கூறியுள்ளார். அந்த நபர் தோழியின் புலம்பலை அவரது அம்மாவிடம் சொல்லியுள்ளார். அம்மாக்கள் எப்போதுமே பிள்ளைகளின் நட்புக்களையும் பிள்ளைகளாகவே நினைப்பார்கள் தானே. அதனால் அடுத்த நாளே அந்தத் தாய் அப்பெண்ணுக்காக வீட்டு சாப்பாடு கொடுத்து அனுப்பியுள்ளார்.


அந்த உணவை சாப்பிட்ட அப்பெண் கண் கலங்கியிருக்கிறார். எல்லாம் ஆனந்தக் கண்ணீர் தான். அதையும் அந்தப் பெண்ணின் நண்பர் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அடுத்தடுத்த நாட்களும் நண்பரின் அம்மா கை உணவு அந்தப் பெண்ணுக்கு வந்து சேர்ந்தது. ஏதோ ஒன்றிரண்டு நாள் என அப்பெண் நினைத்தார். ஆனால் வாரக் கணக்கில் அது தொடர்ந்தது. நெகிழ்ந்து போன அந்தப் பெண், அம்மா நீங்கள் எனக்கு தினமும் உணவு அனுப்புகிறீர்கள். ஆனால் திரும்பி ஏதாவது கொடுக்கும் அளவுக்கு எனக்கு சமையல் தெரியாது. காலி டப்பாவை திருப்பியனுப்ப எனக்கு மனமில்லை. ஆகையால் இனி நான் தாங்கள் அனுப்பும் உணவை ஏற்பதாக இல்லை என்று சொல்லி அனுப்பினார்.


ஆனால் அடுத்த நாளும் அவருக்கு உணவு பார்சல் வந்தது. அதில் ஒரு கடிதமும் இருந்தது. உணவை ரசித்து உண்ணவும். குழந்தைகள் எப்போதும் காலி டிஃபன் பாக்ஸை அம்மாவிற்கு அனுப்புவதில் கவலை கொள்ள வேண்டாம். அந்த டிஃபன் நிறைய அன்பை அனுப்பினால் போதும். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார். அன்புள்ள அம்மா என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.






அந்தக் கடிதத்தை அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரூபெரி என்ற ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து அது பகிரப்பட்டுள்ளது.


நினைவுக்கு வரும் லஞ்ச் பாக்ஸ்: 


இந்த ட்வீட்டைப் பார்க்கும் போது இர்ஃபான் கான் நடித்த லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் நினைவுக்கு வருவதாக ட்விட்டராட்டி ஒருவர் கூறுகிறார். உணவு என்பது வெறும் வயிறு நிரப்பும் பண்டமல்ல அது ஓர் உணர்வு. அம்மா கை உணவு, மனைவி கை உணவு, தந்தை சமைக்கும் உணவு என ஒவ்வொரு உணவுக்குப் பின்னும் ஓர் உணர்வு இருக்கும்.




சில இடங்களில் ஹோட்டல்காரருக்கும் ரெகுலர் கஸ்டமருக்கும் இடையேயும் கூட உணவு ஓர் உணர்வை உண்டாக்கியிருக்கும். வீட்டு உணவுக்கு ஏங்கிய பெண், அதை அம்மாவிடம் சொன்ன நண்பர், அன்றாடம் லஞ்ச் பாக்ஸ் அனுப்பும் அம்மாவும் இப்படியொரு பலமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.