உபெர் மற்றும் ஓலா போன்ற ஆப் மூலம் ஆன்லைனில் கேப்களைப் பெறுவது பலருக்கும் எளிதாக இருப்பதால், பல நகரங்களின் மூலை இடுக்குகள் வரை சென்று அடைந்துள்ளன. கேப்களை பெறுவதும், அதற்கு பேரம் பேசவேண்டிய தேவை இல்லாமல் இருப்பதும், அதனை பயன்படுத்தும் அவசியத்தை அதிகரித்துள்ளது. அதுபோக வெப்பமான கோடை காலங்களில், இந்த ஆப்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடனடியாக புக் செய்து வீட்டிலிருந்து வெளியே வந்து உள்ளே அமர்ந்து கொண்டு செல்லும் இடத்தில் சென்று நேராக இறங்கி விடலாம் என்பதால் அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் விரும்பும் விஷயமாக இது மாறிவிட்டது.


இந்த சம்மர் சீசனில் தனக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவதை உணர்ந்த, டெல்லியில் உள்ள உபெர் டிரைவர் ஒருவர் பயணிகளை வெப்பத்தில் இருந்து கூடுதல் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் தனது காரை மாற்றியமைத்து, ஜூஸ் பாட்டில்கள், பிஸ்கட்கள் மற்றும் வைஃபை போன்றவற்றை போனஸ் அம்சங்களாக தனது வண்டியில் வைத்துள்ளார்.



வைரலாகும் டுவீட்


ஷியாம்லால் யாதவ் என்பவர் பகிர்ந்துள்ள ஒரு டிவீட்டில்தான் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அவர் வெளியிட்டதில் இருந்து, இதுவரை 57ஆயிரம் பேரை சென்று அடைந்துள்ளது. "இன்று Uber இல் சென்றேன், ஒரு சுவாரஸ்யமான ஓட்டுநரை சந்தித்தேன். அப்துல் காதர், 48. அவரிடம் முதலுதவி பெட்டி மற்றும் ரைடர்களுக்கு தேவையான பல அத்தியாவசியப் பொருட்கள், ஏழைக் குழந்தைகளுக்கான நன்கொடைப் பெட்டி ஆகியவை உள்ளன, அதோடு 7 ஆண்டுகளில் எந்த சவாரியையும் ரத்து செய்யவில்லை என்று கூறுகிறார். கவர்கிறார்," என்று அவர் தனது ட்வீட்டில் எழுதினார்.


தொடர்புடைய செய்திகள்: TN Weather Update: மீண்டும் அதிகரிக்கும் வெயில்.. 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்று எப்படி இருக்கும்?


வண்டிக்குள் இருப்பவை


அந்த புகைப்படத்தில், அப்துல் காதர் என்ற நபர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பதை காணமுடிகிறது, பின்னால் சீட்டில் இருந்து ஷியாம்லால் யாதவ் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும் பயணிகளுக்கு தேவையான பொருட்களை அடுக்குவதற்காக சீட்டின் பின் பக்கம் பல விஷயங்களை மாற்றம் செய்து தட்டுகள் போன்று அமைத்துள்ளார். அதில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், மாம்பழ ஜுஸ், பிஸ்கட், செரிமான மிட்டாய் மற்றும் சூயிங்கம் ஆகியவை இருந்தன. உணவைத் தவிர, வாசனை திரவியம், முதலுதவி பெட்டி, சனிடைசர், மருந்துகள், செய்தித்தாள்கள், இயர்பட்ஸ், டிஷ்யூ பேப்பர் மற்றும் குடை ஆகியவற்றையும் காதர் வைத்திருந்தார். இந்த வசதிகள் அனைத்துடன் சேர்த்து, இலவச WiFi யையும் இலவசமாகப் பெறலாம். அதோடு அங்கு ஒரு பயணிகளிடம் கருத்து கேட்கும் டைரியும் இருந்தது.






'எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம்'


அதுமட்டுமின்றி அந்த வண்டிக்குள் இரு அறிவிப்பு பலகைகள் இருந்தன. அதுதான் அதில் மிக முக்கியமானவை. முதல் பலகையில், இங்குள்ள பொருட்கள் இலவசம் என்றும், கருத்துக்களை டைரியில் எழுதவும் என்றும், வைஃபை பாஸ்வேர்டையும் எழுதி இருந்தார். இரண்டாவது பலகையில், "எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம். இங்கு ஆடையின் அடிப்படையில் எந்த மதத்தையும் அடையாளம் காண்பது இல்லை. பணிவான வேண்டுகோள்: நாம் ஒருவருக்கொருவர் கண்ணியமாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு நல்லது செய்வதால் நாம் உத்வேகம் பெற வேண்டும்" என்று எழுதி இருந்தது.