ஒரு மனிதன் தேவையான அளவு சரியாக தூங்கவில்லை எனில் நீரிழிவு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சரியாக தூங்கவில்லை எனில் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்காது; இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது நீரிழிவு பாதிப்பிற்கு வழிவகுக்கும் என்கின்றனர், மருத்துவர்கள்.
அமெரிக்காவில் உள்ள பெர்கிலி நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர். 600 பேர் பங்கேற்ற ஆய்வில் அவர்களின் தூக்கம் மற்றும் அதோடு தொடர்புடைய விளைவுகள் / நன்மைகள் ஆகியவற்றை கண்காணித்துள்ளனர்.
மனிதன் தூங்கும்போது மூளையில் ‘parasympathetic' நரம்பு மண்டலத்தில் உள்ள அலைகள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தூக்கத்தின்போது சீரான வேகத்தைவிடமும் குறைவான அளவில் செயல்படும். அதான், தூங்கும்போது, உடலுறுப்புகள் ஓய்வெடுக்கும் என்று சொல்லப்படுகிறது. (தூக்கத்தின்போது உடலுறுப்புகள் வேலை செய்யும். ஆனால், முழித்திருக்கும் நேரத்தில் இயங்கும் வேகத்தைவிடவும் மெதுவாகவே இயங்கும்.)
இந்த ஆய்வில், சரியாக தூங்காதவரின் இதய துடிப்பின் அளவில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். தேவையான அளவு சராசரியாக உறக்கம் இல்லாதவர்களுக்கு இதய துடிப்பும், சரியான அளவு தூங்குபவர்களின் இதய துடிப்பின் அளவிற்கும் வித்தியாசம் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
நல்ல தூக்கத்தில் இருக்கும்போது, இன்சுலின் சுரப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும் ஹார்மோன் சுரப்பு ஆகியவை நன்றாக செயல்படுகின்றன. இதனால், உணவுகளிலிருந்து குளுகோஸ் உறிஞ்சப்படுகிறது. எல்லா வேலைகளும் சீராக நடைபெறுகிறது. இதனால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. ‘Cell Reports Medicine’ என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம்
கேரட் - இதில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய் ஆகும். இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த கார்போஹைட்ரெட் கொண்ட உணவாகும். நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. இதை நீரிழிவு நோயாளிகள் அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம். இயற்கையிலே இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் பச்சையாகவோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.
ப்ரோக்கோலி - இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு அட்டவணையில் இதை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குழாயில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.இதில் இருக்கும் சல்போராபேன் எனும் கலவை சல்போராபேன் என்சைம்களை உருவாக்குகிறது. இது இரத்த நாளங்களை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இதை சூப் ஆகவோ, வேக வைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.
கீரை - நீரிழிவு நோயாளிகள் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை சர்க்கரை நோயாளிகளும் கீரையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கீரையில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. கீரை சூப் பொரியல், கூட்டு, சாதம் என ஏதேனும் ஒரு வகையில் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை அன்றாட உணவில் எடுத்து கொள்வதால்,இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வெள்ளரிக்காயை சாலட் ஆகவோ, பச்சையாகவோ எடுத்து கொள்ளலாம்.