தலையில் ஒருவகை பூஞ்சை காரணமாக பொடுகு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வடியும் தோல், வறண்ட தோல், தலை சுத்தம் செய்யாதல், தலைக்கு பயன்படுத்தும் அழகு சாதனங்கள் ஆகியவை காரணமாக பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது.
 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பொடுகு பாதிக்கிறது. அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.பொடுகு இருப்பதற்கான முக்கிய அறிகுறி தலையில் அரிப்பு ஏற்படுவது தான். பொடுகானது தலையில் திட்டு திட்டாக காணப்படும். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களுக்கு பொடுகை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. 

 

 


எலுமிச்சை சாறு


எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்.

 




 

தேங்காய் எண்ணெய்


எலுமிச்சை சாறுடன் சுட வைத்த தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தடவலாம். இது வேர்க்கால்களை உறுதிப்படுத்துவதோடு, பொடுகை அகற்றவும் உதவும்

 


வேப்ப எண்ணெய்


தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும். அதோடு தலையில் பேன் தொல்லையை போக்கவும் உதவும்.

 




 

வெங்காய சாறு


 பூஞ்சைக் கிருமிகளை அழிக்க வெங்காயச் சாறு பயன்படும். இருப்பினும், வெங்காய சாறு முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடும். ஆகவே வெங்காயச்சாறை நீண்ட நேரம் தலையில் வைத்திருக்காமல், 5-10 நிமிடங்களில் குளித்து விட வேண்டும்.

 

எலுமிச்சை புல் எண்ணெய்

ஆங்கிலத்தில் லெமன் கிராஸ் ஆயில் என அழைக்கப்படும் எலுமிச்சை சாறு எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவினால், பொடுகு நீங்கும். எலுமிச்சைச் சாறு போல எலுமிச்சை புல் எண்ணெயும் நல்ல பலனளிக்கக் கூடியதாக உள்ளது.



 

சமையல் சோடா


சமையல் சோடாவை பேஸ்ட் போல கறைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இருப்பினும், அதிகமாக இதனை பயன்படுத்தினால் தோல் வறண்டு விடும். ஆகவே அளவுடன் பயன்படுத்த வேண்டும்.

 




 

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாறை தலையில் தடவலாம், அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது பொடுகை போக்குவதோடு கூந்தல் பொலிவைக் கூட்டவும், கூந்தலை வலுவாக்கவும் உதவுகிறது.

 


 

முட்டையின் மஞ்சள் கரு


முட்டையின் மஞ்சள் கருவை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும். மஞ்சள் கருவின் வாசனை கூந்தலில் தங்கிவிடும் என்பதால், ஷாம்பூ போட்டு கூந்தலை அலசலாம். அல்லது அலசும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம். 

 


 



 

கற்றாழை


கற்றாழை கூழை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும். மயிர்க்கால்கள் உறுதியாகவும், கூந்தல் வறட்சியை சரி செயவும் இது உதவும். கூந்தல் வளர்ச்சியையும் கற்றாழை தூண்டும். 

 




 

பூண்டு பேஸ்ட்


பூண்டு பேஸ்ட்டை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும். பூண்டில் இருக்கும் அமிலத்தன்மை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், ஒவ்வாமை கொண்டவர்கள் இதனை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

 


 

வெந்தயம்





இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து அரைத்து அந்த கலவையை தலையில் தடவி குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும்.