சரும பராமரிப்பு என்பது பெண்களை பொறுத்த அளவில் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. அனைவருக்குமே ஆரோக்கியமான பளபளப்பான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சருமத்தின் அழகு மற்றும் பளபளப்புக்கு இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக சருமம் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருந்தால் ஒரு பளபளப்புடனும் பிரகாசமாகவும் இருக்கும்.
சரும பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது ஏராளமானோரிடம் அதிகமாக இருக்கிறது எனவே சொல்ல வேண்டும். ஆரோக்கியமான மற்றும் நன்கு பொலிவான சருமம் வேண்டுமென்றால் தினசரி தோல் பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டுமென அழகு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ,புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் சருமம் பிரகாசத்துடன், வசீகரத்துடன் ஒளிர வேண்டும் என்றால் தினசரி சரும பராமரிப்பு என்பது கட்டாயமானதாகும். ஆகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு முன் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி குளிர்ச்சியான தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும். மேக்கப்பைக் அகற்றாமல் தூங்குவது சருமத்தை மந்தமாகவும் சோர்வாகவும், பருக்கள் அடர்ந்த ஒன்றாகவும் மாற்றுகிறது.
அதேபோல் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதையும் இந்த மேக்கப் தடுக்கிறது. ஆகவே இரவு வேளையில் முகம் எந்த அழுக்குகளும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.
எனவே, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, தோல் செல்களை சீர் செய்து, முகம் பளபளப்பாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதற்கு முறையான சரும பராமரிப்புகளை செய்ய வேண்டும்.
1.மேக்கப்பை அகற்றுதல்:
இரவு தூங்கச் செல்வதற்கு முன் முகத்தில் போடப்பட்டுள்ள மேக்கப்பை அகற்றுவது கட்டாயமானதாகும். சருமத்தின் அழகை பேணுவதற்கு முகத்தை சுத்தப்படுத்துவது முக்கியமானதாகும். சருமத்தின் மேல் உள்ள மேக்கப் மற்றும் அதிகப்படியான அழுக்குகளை அகற்றுவதற்கான சிறந்த வழி, சில மைக்கேலர் நீர் அல்லது லேசான மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதேயாகும். பக்க விளைவுகள் அற்ற மேக்கப் ரிமூவர் பயன்படுத்த வேண்டும் .இது சரும வறட்சியை தடுத்து , அலர்ஜி ஏதும் ஏற்படுத்தாத வகையில் எண்ணெய் தன்மையிலிருந்து விடுவிக்கும்.
2. சரும சுத்தம்:
எப்போதும் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்றால் தினம்தோறும் முகத்தை அழுக்குகள் அற்றவாறு சுத்தப்படுத்த வேண்டும்.
தோல் பராமரிப்பு என்பது பெண்களைப் பொறுத்த அளவில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாத முறையில் செய்யப்பட வேண்டும். சரும அடுக்குகளில் இருந்து எண்ணெய், ஒப்பனை எச்சங்கள், அழுக்குகளை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். தோலின் மேற்பரப்பில் இருக்கும் இறந்த சரும செல்கள் மற்றும் மாசுகளை அகற்ற எண்ணெய் மற்றும் நீர் சார்ந்த ரிமூவர்கள் மூலம் இருமுறை சுத்தம் செய்யலாம் என கூறப்படுகிறது.
3. டோனர்:
சருமத்தின் அழகுக்கும் பொலிவாக்கும் டோனர் மேலும் மெருகூட்டுகிறது. முகத்தை சுத்தம் செய்த பின்னர் டோனரை கட்டாயமாக முகங்களில் தடவ வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. பகல் மற்றும் இரவில் டோனிங் செய்வது சருமம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சருமத்தை ரீஹைட்ரேட் செய்வது முதல் அனைத்து அழுக்குகள் மற்றும் மாசுகளை நீக்குவது வரை என டோனர் அனைத்தையும் செய்ய உதவுகிறது. ஆல்கஹால் இல்லாத டோனர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் உங்களது தோலின் தன்மைக்கு ஏற்றவாறு டோனர்களை தேர்வு செய்ய வேண்டும். எப்போதுமே முகம் பளபளப்பாக இருக்க, சருமத்திற்கு தினமும் சில துளிகள் டோனியை எடுத்து முகம் முழுவதும் தடவி விடவும்
4 .சீரம்:
தினசரி சரும பராமரிப்புக்கு சீரம் அவசியமானது என அழகு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையான பொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்ட சீரம்களை முகத்திற்கு பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என கூறப்படுகிறது. சருமத்திலுள்ள மந்தமான தன்மையை எதிர்த்து போராடுவதுடன் சருமத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்றவற்றை இந்த சீரம் சரி செய்கிறது.
5. சரும ஈரத்தன்மை:
சருமம் அழகாக பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் எப்போதும் ஈரத்தன்மை பேணப்பட வேண்டும். தோல் பராமரிப்பு முறையில் சரும ஈரப்பதம் என்பது இன்றியமையாததாகும். சரியான மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்து தோலுக்கு பயன்படுத்துவது ,நாள் முழுவதும் பளபளப்பான சருமத்தைப் பெறவும் உதவுகிறது. நல்ல மாய்ஸ்சரைசர்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. எப்போதும் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது.