தினமும் காபி மற்றும் வால் நட் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பிரச்சனை ஏற்படவாய்ப்பில்லை என அமெரிக்க ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
சமீப காலங்களாக இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இதயநோயினால் பாதிப்பினைச் சந்தித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி, சராசரியாக அமெரிக்காவில் ஒவ்வொரு 37 வினாடிக்கும் ஒருவர் இறக்கிறார்கள் எனவும், அதில் ஒவ்வொரு நாளும் 2,353 பேர் இதய நோயினால் இறக்கிறார்கள் என்று தெரியவருகிறது. இதற்கு முக்கியக்காரணம் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்கள் முறையான உணவு முறை மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே இதய நோயினைக்கட்டுப்படுத்தலாம். எனவே பல உணவு முறைகளுக்கு மத்தியில், காபி மற்றும் வால்நட் சாப்பிட்டுவந்தாலே ஓரளவிற்கு பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை நிரூபிக்கும் விதமாக ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளது.
கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் வால்நட்:
அக்ரூட் பருப்புகள் என்றழைக்கப்படும் வால்நட்டை நாம் தினமும் உட்கொண்டால் இதய நோயினைக்கட்டுப்படுத்துமா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பார்சிலோனா, ஸ்பெயின் அல்லது கலிபோர்னியாவின் லோமா லிண்டாவில் வசிக்கும் 63 முதல் 79 வயதுக்குட்பட்ட 628 பெரியவர்களின் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் இரண்டு குழுக்களாகப்பிரிந்து 2 ஆண்டுகளுக்கு ஒருவர் தினசரி அரை கப் வால்நட் மற்றும் மற்றொரு குழு எதனையும் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியது. இதன் மூலம் வால்நட் பருப்புகளை உட்கொள்வது இதய நோய் ஆபத்தைக்குறைக்குமா? என ஆய்வுள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் தான், அமெரிக்கன் ஹார்ட் அசோசியன் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவில், வால்நட்டை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு சாப்பிட்டு வந்தவர்களுக்கு உடலில் உள்ள மொத்த கொழுப்பைக் குறைப்பதோடு, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக்குறைக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.
.இதோடு ஆய்வின் போது வால்நட் பருப்புகளை உட்கொண்ட நபர்கள் எல்டிஎல் கொழுப்பின் அளவ சராசரியாக ஒரு டெசிலிட்டருக்கு 4.3 மில்லி கிராமும், மொத்த கொலஸ்ட்ராலில் சராசரியாக 8.5 மில்லி கிராம் குறைந்துள்ளது. அதே வேளையில், பாலினத்தின் அடிப்படையிலும் கொழுப்பின் விகிதங்கள் மாறுபட்டிருந்தன. அதாவது ஆண்களில் கெட்ட கொழுப்பை 7.9 சதவீதமாகவும், பெண்களில் இது 2.6 சதவீதமாகவும் உள்ளது. எனவே இதய நோய் பிரச்சனையை சந்தித்து வரும் நபர்கள், தங்களின் அன்றாட உணவில் வால்நட்டை சேர்ப்பது அதிகளவு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம் என ஆய்வுகள் மூலம் நம்பப்படுகிறது.
மேலும் வால்நட் பருப்பினையடுத்து காபியை பருகுபவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு குறைவாகத்தான் காணப்படுகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. ஆரம்ப கட்டத்தில் 56 வயதுடைய மற்றும் இதய நோய் அறிகுறி இல்லாதவர்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வின் போது, நாள் ஒன்றுக்கு மூன்று கப் அல்லது குறைவான அளவில் காபி குடிப்பவர்களுக்கு இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் 21 சதவீதமாக குறைந்தது எனவும் ஆய்வுகள் கூறுகின்றனர். எனவே தற்போது அதிகரித்து வரும் இதய நோயிலிருந்து அனைவரையும் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு முறை மற்றும் அன்றாட வாழ்க்கையில் சில பழக்க வழக்கங்களை மாற்றினாலே எந்த பாதிப்பும் அதிகளவில் ஏற்படாது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.