ஒரு காலத்தில் கொண்டாடவும், குதூகலிக்கவும் மட்டுமே மக்கள் நாடி வந்த தியேட்டர்கள். இன்று போகலாமா... வேணாமா... என்கிற அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இது தியேட்டர்களின் குறை அல்ல. சூழலின் குறை.உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவிற்கு தியேட்டர் மட்டும் விதிவிலக்கா என்ன...? இதோ... அதோ... என ஒரு வழியாக தியேட்டர் திறந்தாலும், இன்னும் மூடியே நிலையிலேயே உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் தியேட்டர்கள் திறந்த போது, பார்வையாளர்களும், தியேட்டர் நிர்வாகிகளும் சந்தித்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்...? இன்றைய உல்டாவில் தியேட்டர் சிந்னையாக பார்க்கலாம்...!




தேடினாலும் கிடைக்காத ‛ஆப்’


‛நீண்ட நாட்களுக்குப் பின் தியேட்டர் திறந்திருக்காங்க... போய் என்னதான் இருக்குன்னு பார்ப்போம்...’ என, ஒருவர் துணிந்து புறப்படுகிறார். முன்பெல்லாம் ஒரு படத்திற்கு செல்ல வேண்டுமானால், ஒரு வாரத்திற்கு முன்பு டிக்கெட் புக் பண்ண வேண்டும். ஆன்லைன் அல்லது நேரில் அந்த புக்கிங் இருக்கும். அந்த நியாபகத்திலேயே ஆன்லைன் புக்கிங் அப்ளிகேஷனை தேடுகிறார். வேளைக்கு 3 என்கிற மாத்திரை போடும் விகிதத்தில், அதற்கு முன் அந்த ‛ஆப்’பை தினமும் 3 முறையாவது திறந்து பார்க்கும் பழக்கம் அவருக்கு. ஆனால் இப்போது நீண்ட இடைவெளி. ஆப் பெயரையே அவர் மறந்திருந்தார். மொபைலில் புதைந்துள்ள நூற்றுக்கணக்கான ‛ஆப்’களில் அதை தேடுகிறார். ஒருவழியாக கண்டும் பிடிக்கிறார். கிளிக் செய்தால், பல ஆண்டுகள் அப்டேட் ஆகாத அந்த ஆப், தன்னை அப்டேட் செய்ய கேட்கிறது. அதையும் செய்கிறார். இப்போது உள்ளை நுழைந்தால்,எந்த தியேட்டர் புக்கிங்கும் இல்லை. அதற்காக ஆப் வெறுமனேவும் இல்லை. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூவி, ஷோ உள்ளிட்டவை புக் செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. ‛அடப்பாவிகளா... இதுலயுமா ஆன்லைன் புக்கிங்...’ என நொந்து கொண்டு ஆப்ளிகேஷனை குளோஸ் செய்கிறார் அந்த நபர். 




‛வா... சுல்தான்... வா.... சுல்தான்... வா... சுல்தான்... வா...!’


தியேட்டருக்கு போகணும்னு ஆசை இருக்கு. ஆனால் எந்த படத்திற்கு போக வேண்டும் என்கிற கேள்வியும் இருக்கு. இந்த தியேட்டரில் இந்த படம் ஓடுது என்கிற எந்த தகவலுக்கும் எங்கும் இல்லை. ஆனால் திறந்த தியேட்டருக்கு விசிட் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம். சரி, கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு பிரபல தியேட்டர் ஒன்றுக்கு புறப்பட்டார். பிரபல தியேட்டராச்சே... குறைந்தபட்சம் நல்ல படம் போட்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை அவருடையது. தியேட்டருக்கு போனால், ‛சுல்தான்’ படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்கிறது. ஓடிடியில் நிரந்தர இருப்பு, டிவியில் ஒன்றுக்கு 10 முறை ஒளிபரப்பியிருப்பார்கள், போதாக்குறைக்கு பைரஸியாக டெலிகிராம் உள்ளிட்ட அத்தனையிலும் ரீலிஸ்... அந்த படம் தான் போஸ்டர் வழியாக தியேட்டருக்குள் அழைக்கிறது. ‛வா... சுல்தான்... வா சுல்தான்...’ என்கிற பாடலும் அதை மனதில் வைத்து தான் எழுதியிருப்பார்கள் போல என அவர் நினைத்துக் கொண்டார். சரி நம்மை வர வச்சுட்டாங்க...’ என டிக்கெட் கவுன்டருக்கு செல்கிறார். படம் பார்க்க வருபவருக்கு தான் இந்த நிலை என்றால், டிக்கெட் கொடுப்பவர் நிலை அதை விட மோசமாக இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டிக்கெட்டுகளை வழங்கி பழகியிருந்த அவருக்கு, ஒரு டிக்கெட்டை ப்ரிண்ட் எடுக்கவே மெனக்கெட வேண்டியிருந்தது. ஷாட் கீ அனைத்தையும் மறந்திருந்தார். ஒரு வழியாக அனைத்தையும் தேடி பிடித்து டிக்கெட் கொடுத்துவிட்டார். ஏதோ பொதுத்தேர்வு மார்க் ஷீட்டை பெற்றது போல ,அந்த நபருக்கு டிக்கெட் கையில் வந்ததும் அவ்வளவு ஆனந்தம். 





‛ஆரம்பிக்கலாமா..?’


விடுமுறைக்கு பின் கல்லூரி திறக்கும் போது, அறைக்கு வெளியே காத்திருக்கும் மாணவனின் மனநிலை போன்று, தியேட்டர் வாசலில் காத்திருக்கிறார். முன்பெல்லாம் நிமிடத்திற்கு பலர் படையெடுக்கும் தியேட்டரில், அன்று மணிகணக்காகியும் ஒருவர், இரண்டு பேர் மட்டுமே வருகை தந்தனர். ஷோ டைம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் கடந்துவிட்டது. கூட்டம் அதிகமா இருக்கும் முன்பே போய் டிக்கெட் எடுத்துவிடலாம் என்கிற ஆர்வத்தில் அவர் முன்கூட்டியே வந்திருந்ததால், காத்திருக்க வேண்டிய கட்டாயம். ஒரு வழியா... தியேட்டர் திறக்கிறது. விரல் விட்டு எண்ணிவிடலாம்; அந்த நபர்கள் தான் தியேட்டர் உள்ளே நுழைகிறார்கள். அரசு விதிப்படி தியேட்டர் உள்ளே தூய்மை, சுகாதாரம், இடைவெளி எல்லாம் தயார் செய்யப்பட்டுள்ளது. ‛பரவாயில்லை எல்லாம் சரியா பண்ணிருக்காங்க...’ ஆட்கள் தான் வரணும் என்கிற ஆர்வத்தோடு சுல்தான் தரிசனத்திற்கு காத்திருக்கிறார் அந்த நபர்.




‛கண்டா வரச்சொல்லுங்க...’ 


வழக்கம் போல படம் திரையிடுவதற்கு முன், ஆடியோ ஒலிப்பாகிறது. ஆளுக்கொரு திசையில் அமர்ந்து கொண்டு பார்வையாளர்கள் அதை ரசிக்கிறார்கள். இப்போது தான் ஒருவர் உள்ளே வருகிறார். அவர் வருவதற்கான சமிக்ஞை... லைட் அனைத்தும் ஆப் ஆகிறது. சரி படம் போடப்போறாங்க போல என அனைவரும் ஆர்வமாக, ‛சார்... எல்லாரும் கொஞ்சம் வெளியே வாங்க... ஷோ கேன்சல்,’ என்கிறார் அந்த நபர். ‛ஏங்க டிக்கெட் வாங்கிருக்கோம்... நாங்க எதுக்கும் போகணும்...’ என ஏமாற்றத்தை கோபமாய் கேட்கிறார் அந்த நபர். ‛சார்... 15 பேராவது இருந்தா தான் படம் போட முடியும். 8 பேர் தான் இருக்கிங்க... கட்டுபடி ஆகாது சார்... கரெண்ட் பில் கூட கட்ட முடியாது... முதலாளி குளோஸ் பண்ணச் சொல்லிட்டாருனு,’ தியேட்டர் ஊழியர் சொல்ல, ‛அப்போ எங்க டிக்கெட்...?’ என அவர்கள் கேட்க, ‛அடுத்த ஷோக்கு வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க... இல்லைன்னா வெளியே கவுன்டர்ல போய் ரிட்டன் பண்ணிக்கோங்க...’ என நியாயமான தீர்வை கூறுகிறார் ஊழியர். வேறு வழி. வந்த வழியில் திரும்பி, டிக்கெட்டை ரிட்டன் செய்து பணத்தை பெறுகிறார்கள். ‛மாஸ் ஹீீரோக்கள் படம் அடுத்து வந்தால் தான், கூட்டம் வரும். அதுவும் ரசிகர் கூட்டமாகத் தான் இருக்கும். அந்த கூட்டம், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இருக்குமா என்கிற சந்தேகம். நாள் கணக்கில் தொடர்ந்தாலே ஆச்சர்யம் என்கிற நிதர்சனம். அந்த நாள் என்று வரும்...’ இப்படி சிந்தித்தப்படி வெளியே வந்த அந்த நபர், ஒருமுறை தியேட்டரை மீண்டும் திரும்பிப் பார்க்கிறார். ‛வா... சுல்தான்... வா... சுல்தான்... வா...’என அதே போஸ்டர், அதே படம்... மட்டுமே தெரிகிறது. அந்த போஸ்டரும் மாறி, சூழலும் மாறினால் தான் இனி தியேட்டரில் படம் பார்க்க முடியும் என்கிற உண்மையுடன் வீடு திரும்புகிறார். 


மேலும் உல்டா தொகுப்புகள் படிக்க...


உல்டா: ‛என்ன கொடுமை சரவணன் சார்...’இன்றைய பள்ளி... இன்றைய மாணவ சிந்தனை!