சட்டென்று மாறுது வானிலைனு சொல்லும் அளவுக்கு வெதர் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருநாள் வெயில் வெளுத்தால் அடுத்த நாள் மழை வெளுக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த திடீர் வானிலை மாற்றம் சிலரின் உடலிலும் மாற்றத்தை கொடுக்கும். க்ளைமெட் ஒத்துக்கலனு சொல்வதை இதைத்தான். சளி, காய்ச்சல், இருமல் என உடல் பிரச்னைகளும் வானிலை மாற்றத்தோடு சேர்ந்தே வரும். அதனை தடுக்க நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலே போதும். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக தேவைப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், கீரைகள், இறைச்சி, மீன், முட்டை என சத்தான உணவு வகைகளில் எதிர்ப்பு சக்தி தாராளமாகவே கிடைக்கிறது. ஆனாலும் வீட்டில் இருக்கும் சில பொருட்களில் எதிர்ப்பு சக்தி அதிகம். அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மிளகு:
சிலர் மிளகைப் பார்த்தாலே ஓட்டம் பிடிப்பார்கள். உணவில் இருந்து தனியாக மிளகைப் பொறுக்கி ஓரமாக வைப்பதில் சிலர் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த மிளகில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. உடல் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க மிளகு உதவுகிறது. மிளகு பொடி, மிளகு என உங்களது உணவில் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் மிளகை ஒதுக்கும் ஆள் என்றால், இனி சாப்பிட பழகுங்கள்.
பூண்டு:
சளி, காய்ச்சல் என்றால் பூண்டு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பூண்டில் எதிர்ப்பு சக்தி அதிகம். பூண்டு வாசனை பிடிக்காது என சிலர் பூண்டை ஒதுக்குவார்கள். ஆனால் பூண்டு மிக அதிக எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுப்பொருள் என்பதால் அதனை தவிர்க்கவே கூடாது.
இஞ்சி:
பூண்டு என வந்துவிட்டாலே அசைவ சாப்பாடுகளில் இஞ்சியும் சேரும். செறிமானம், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்பிரச்னை என பல பிரச்னைகளுக்கு இஞ்சி தான் தீர்வு. அசைவத்தில் அதிகம் இஞ்சி சேர்க்கப்படுவதும் அதற்காகவே. இந்த இஞ்சியில் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருளும் அதிகம். சாப்பாடு மெனு இஞ்சி இல்லாமல் இருக்கவே கூடாது. குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே இஞ்சியை சாப்பிட பழக்கம் செய்ய வேண்டும். மிகச் சிறிய துண்டுகளாக இஞ்சியை நறுக்கி சமைத்தால் குழந்தைகள் ஒதுக்காமல் இஞ்சியை சாப்பிடுவார்கள்.
எலுமிச்சை:
வீட்டில் இருக்க கண்டிப்பாக இருக்க வேண்டிய மரங்களில் ஒன்று எலுமிச்சை என்பார்கள். அந்த அளவுக்கு எலுமிச்சையில் பலன்கள் அதிகம். எலுமிச்சை சாறு முதல் எலுமிச்சை தோல் வரை மருத்துவக் குணம் நிறைந்தது. விட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை வானிலைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். எலுமிச்சை தேநீர் குடிப்பது, எலுமிச்சை ஜூஸ் என தினமும் எலுமிச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள்:
அதிக மருத்துவக் குணம் கொண்டதால்தான் மஞ்சள் ஆன்மீகத்திலும் இடம்பெறுகிறது. சில விஷயத்தை முறிக்கும் அளவுக்கு மஞ்சளில் மருத்துவக்குணம் உண்டு. இது நோயை உருவாக்கும் பாக்டீரியா, வைரஸுக்கு எதிராக போராடும் குணம் கொண்டது. உணவில் மஞ்சளை தவிர்க்கவே கூடாது.
தேன்:
இயற்கையால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மருந்து தேன். சுத்தமான தேனை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலில் கலந்து குடிப்பது, தேனால் இனிப்பு பண்டங்கள் செய்வது என தேனை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். பருவக்காலங்களில் ஏற்படும் அலர்ஜிகளை தேன் சரிசெய்யும். தேன் இனிப்புச்சுவை கொண்டதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
கொரோனாவில் இருந்து மீண்டவர்களே.. சத்தான உணவே முக்கியம்; என்ன சாப்பிடலாம்?