’வாங்க ஒரு டீ/ காபி குடிச்சிட்டு வரலாம்னு’ அதிகமாக இந்த வார்த்தைகளை பயன்படுத்துபவர்களுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சமீபத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில், டீ அல்லது காஃபி அதிகளவு அருந்துவதால் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டிருந்தது.
உடலுக்கு இரும்புச் சத்து தேவை என்பவர்கள். சாப்பாட்டிற்கு முன்பும் சாப்பிடதற்கு பின்பும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு டீ, காஃபி குடிக்க கூடாது என்றும் அதிகளவில் பால் சேர்த்த டீ,காஃபி குடிக்க வேண்டாம் என்றும் ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரோக்கியமான உணவு பழக்கம், வாழ்வியல் முறையை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது தொடர்பாக 17 புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இது குறித்தும் ஒருவர் நாளொன்றிற்கு எத்தனை முறை டீ,காஃபி குடிக்கலாம், அதிகமாக டீ அருந்துபவர்களுக்கான தீர்வு உள்ளிட்ட பல சந்தேகங்களுடன் மருத்துவ ஆலோசகர் பிரணீதாவை அணுகியபோது அவரளித்த விளக்கத்தை விரிவாக காணலாம்.
ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கூறும்போது, “ முன்பெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறை டீ,காஃபி என்றிருந்தது, பணி சூழலால் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஆறு கப் என மாறிவிட்டது. இது உடல்நலனுக்கு நல்லதல்ல. இது உணவுக்கு மாற்றாக என்ற நிலையாகிவிட்டது. 5-6 முறை டீ,காஃபி குடிப்பது என்பது ஆரோக்கியமற்றது.” என்கிறார்.
ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிக்கலாம்; ஏன் அதிகமாக குடிக்க கூடாது என்பது குறித்து விளக்கமளித்த அவர்,” டீ,காஃபில் உள்ள சில எலமெண்ட்ஸ் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதன் காரணமாகவே ஐ.சி.எம்.ஆர். சமீபத்தில் வழிகாட்டுதல் அறிவுரைகளை வழங்கியிருந்தது. சாப்பிடுவதற்கு முன்பாகவோ, பிறகோ டீ,காஃபி குடிப்பதால் உணவிலுள்ள சத்துகள் உறிஞ்சப்படுவதில்லை. அதனாலேயே சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் பின்னரும் டீ, காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.” என்று அறிவுறுத்துகிறார்.
காலையில் எழுந்ததும் முதலில் உணவுப் பொருளாக டீயோ காஃபியோ குடிப்பதே பல ஆண்டுகளாக நம் வழக்கமாக உள்ளது. ஆனால், அப்படி செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கிறார் பிரணீதா. காலையில் வெறும் வயிற்றில் டீ, காஃபி ஏன் குடிக்க கூடாது என்பதற்கு பதிலளிக்கையில்,” காலையில் எழுந்ததும் உடலில் ஹார்மோன் சுரப்பு நிகழும். அப்போது டீ, காஃபி குடித்தால் அது ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். ஆகவே, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு பிறகே காஃபி குடிப்பது உகந்தது.’ என்று வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும் என்றும் தெரிவிக்கிறார்.
அதோடு, மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றில் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் மாலை 4 மணிக்கு மேல் டீ,காஃபி குடிக்க கூடாது என்று வலியுறுத்துகிறார். அதிலுள்ள காஃபின் தூக்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார். அதோடு, ஒரு நாளைக்கு 2-3 கப் டீ,காஃபி குடிப்பது பரிந்துரைப்படுகிறது.
பாதிப்புகள் என்ன?
ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது சாப்பிடதும் டீ, காஃபி குடிப்பதில் உள்ள சிக்கல் குறித்து தெரிவிக்கையில்,” தொடர்ச்சியாக அதிகமாக டீ, காஃபி குடிப்பதால் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் சிக்கல் ஏற்படும். செரிமான மண்டலம் சீராக இயங்காது; குறிப்பாக நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்தும். அல்சர் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.” என்றார்.
தீர்வு
அடிக்கடி டீ,காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஹெர்பல் டீக்கு மாறலாம். டீ,காஃபி குடிக்க வேண்டும் என்ற தோணும்போது வெந்நீர் குடிக்கலாம். ஹெர்பல் டீ, ப்ளாக் டீ, காஃபி என்றாலும் உணவுக்கு முன்போ, பின்போ குடிப்பது பரிந்துரைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். எந்த ஒரு பழக்கத்தை புதிய பழக்கத்தின் மூலம் எளிதாக கைவிட முடியும். ஒரு கப் டீ.காஃபி-க்கு மேல் குடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். முயற்சி செய்யுங்க!