கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டத் தொடங்கி விட்டன. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்களுடன் அலுவலகங்கள் தொடங்கி வீதிகள் வரை வண்ணங்களால் மிளிரத் தொடங்கி விட்டன.


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதோடு தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் எல்லைகளைக் கடந்து, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒரு பண்டிகையாக கிறிஸ்துமஸ் நாள் மாறியுள்ளது.


வரலாற்றில் கிறிஸ்துமஸ் தினம்


'கிறிஸ்துமஸ்' என்ற வார்த்தை கிறிஸ்து அல்லது கடவுள் இயேசுவின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமே கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், கி.பி 221 ஆம் ஆண்டு முதல் தான் டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடும் வழக்கம் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


9ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் தினம் பரவலாகக் கொண்டாடப்படத் தொடங்கினாலும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர்  ஆகிய பண்டிகைகளின் வழிபாட்டு முக்கியத்துவத்தை  கிறிஸ்துமஸ் அடையவில்லை. கிறிஸ்துவ சமூகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடக்க காலத்தில் விரும்பப்படவில்லை என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.


ஆனால் சிறிது சிறிதாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத்தொடங்கின. முதலாம் கிறிஸ்தவ ரோமப் பேரரசர் என அழைக்கப்படும் முதலாம் கான்ஸ்டன்டைன் டிசம்பர் 25ஆம் தேதியை ‘கிறிஸ்துமஸ்’ என்றும்  இயேசுவைக் கொண்டாடும் நாளாகவும் அறிவித்தார்.


கொண்டாட்டமும் வழிபாடும்


நன்றி-பிடிஐ


பொதுவாக ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் நள்ளிரவு முதல் கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றன. புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை முதலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன.


ஏதேன் தோட்டத்தில் வீழ்ச்சியிலிருந்து கிறிஸ்துவின் வருகை வரையிலான ரட்சிப்பின் வரலாற்றை விவரிக்கும் வேத வாசிப்புகள் கிறிஸ்துமஸ் நாள்களில் நடத்தப்படுகின்றன. E.W. பென்சன் என்பவரால் முதன்முதலில் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்னர் இந்த வழிபாடு முறை உலகம் முழுவதும் பிரபலமானது.


முக்கியத்துவம்


கிறிஸ்துமஸ் தினம் இயேசுவின் பிறந்த நாளைக் குறிப்பது மட்டுமல்லாமல், அவர் இந்த பூமியில் எவ்வாறு நடந்து கொண்டார், அவரது மாண்பு, கருணை ஆகியவற்றை நினைவில் கொண்டு போற்ற வேண்டிய நாளாக பார்க்கப்படுகிறது.


மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நாளில் ஒன்று கூடி வழிபட்டும்,  இயேசுவின் தியாகங்களுக்கு நன்றி செலுத்தியும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி பரிசு கொடுத்தும் கொண்டாடுகின்றனர்.


மேலும் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்களால் தங்கள் வீடுகளை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டாகிளாஸ் போல் வேடமிட்டும், கேக் உள்ளிட்ட உணவுகளைப் பரிமாரியும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.