எந்த ஒரு விருந்தாக இருந்தாலும் அதில் சிக்கன் இடம்பெறவில்லை என்றால் அந்த விருந்தின் நோக்கமே இடம்பெறாமல் போகும் அளவுக்கு சிக்கன் மீதான மக்களின் பிரியம் இருக்கிறது. வழக்கமான சிக்கன் பட்டர் மசாலா, சிக்கன் டிக்கா மசாலா தொடங்கி, சிக்கன் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து உணவு வகைகளுமே நமது நாவுக்கு நல்ல சுவை அனுபவத்தை அளிப்பவை. இவற்றைச் சூடான அரிசி சோறுடனோ, ரொட்டி முதலானவற்றுடனோ உண்பதும் பேரனுபவம் அளிப்பது. சிக்கன் உண்பதைப் பற்றி பேசும் போதே, உங்கள் நாவில் எச்சில் ஊற வைத்தால், உங்களுக்காகவே புதிய சிக்கன் ரெசிபி ஒன்றை இங்கு அளிக்கிறோம்.
சிக்கன் பசண்டா மொகலாயர்களின் உணவு. இதனைச் செய்வதற்கு முதலில் பல்வேறு வகையான மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பக்கம் சிக்கனைச் சமைத்துக் கொண்டே, மறுபக்கம் இதற்கான கிரேவி செய்யப்படுகிறது. இந்த ரெசிபியை நீங்கள் செய்வதற்குப் புதிதாக எதுவும் தேவையில்லை. உங்கள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருள்களைப் பயன்படுத்தி, இந்த சுவையான சிக்கன் உணவை வீட்டிலேயே செய்யலாம். இந்த உணவு வகை நாவுக்கு அருமையான அனுபவம் அளிக்கிறது. உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது, உங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த இந்த ரெசிபியை நீங்கள் தயார் செய்யலாம்.
சிக்கன் பசண்டா செய்வது எப்படி? ரெசிபி இதோ...
முதலில், இஞ்சிப் பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு, இனிப்பு இல்லாத பால்கோவா, வெங்காயம், சீஸ், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதனை சிக்கனுக்குள் முழுவதுமாகத் தடவ வேண்டும். இவற்றை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அடுத்த, வாணலியில் கொஞ்சமாக நெய்யைச் சுட வேண்டும். அதனோடு கறுப்பு ஏலக்காயும், பச்சை ஏலக்காயும் சேர்க்க வேண்டும். இவை சற்று சிதறிய பிறகு, இதனோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதன்பிறகு, இந்தத் தண்ணீருடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அடுத்து அதனை வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்து கொண்டிருக்கும் போதே, இதற்கான கிரேவியைச் செய்யலாம்.
முதலில் கொஞ்சம் சீவப்பட்ட தேங்காய், முந்திரி பருப்பு ஆகியவற்றை எண்ணெய் பயன்படுத்தாமல் ரோஸ்ட் செய்ய வேண்டும். இது முடிந்தவுடன் அதனை மிக்ஸியில் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் செலுத்தி, நன்கு அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக நெய்யைச் சுட வைத்து, அதனுடன் வெங்காயத் துண்டுகள், இஞ்சிப் பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து, முழுவதுமாக வதங்க விட வேண்டும். இவற்றோடு யோகர்ட் சேர்த்து, அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கப்பட வேண்டும். மேலும், நாம் ஏற்கனவே அரைத்த தேங்காய் - முந்திரி பேஸ்டை இதனோடு சேர்த்துவிட வேண்டும். இதனோடு காரத்திற்கு ஏற்ப பிற மசாலா பொடிகளைச் சேர்த்து, தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்துவிட வேண்டும். நீங்கள் செய்திருக்கும் கிரேவி அதன் அடர்த்தியை அடைந்தவுடன் அதனை ஏற்கனவே செய்துள்ள சிக்கனோடு சேர்த்து, கலந்து உண்டு மகிழலாம்.