தலைநகர் டெல்லியில் நேற்று இனிப்பானதொரு சம்பவம் நிகழ்ந்தது. டெல்லியைச் சேர்ந்த காதல் ஜோடி நேற்று அங்கே பிதம்புராவின் சி.எஸ்.சி. மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் எளிமையாகத் தங்களது திருமணத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த ஸ்வீட் அண்ட் சிம்பிள் திருமணம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 


தலைநகர் டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அசியா இஸ்லாம். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற அசியா தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாலின ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சக ஆராய்ச்சியாளர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள அசியா, ‘என் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு அப்டேட் ஆகியுள்ளேன். ஆராய்ச்சியாளராக இருந்து செஃப்பாக மாறியிருக்கும் ஒருவரைத் திருமணம் செய்துள்ளேன். அவருக்கு பிரெட், பீர் மற்றும் சீஸ்கேக் தயாரிப்பது மிகவும் பிடிக்கும். தன்னடக்கமான நபர், ஆனால் அது ஆராய்ச்சியாளர்களுக்கே உண்டான கேரக்டர்தானே’ எனக் கூறியுள்ளார். 






மேலும், ‘எங்கள் இருவருக்குமே ரொமான்ஸ் வராது.அதற்கேற்றபடி இன்று ஜெராக்ஸ் கடையில் எங்களது திருமணம் நடந்தது.அங்கே வைத்துதான் எங்கள் திருமணத்துக்குக் கையெழுத்திட்டோம்’ என ட்வீட் செய்துள்ளார் அசியா. 


இந்த ஜோடிக்கு தற்போது ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மேலும் ‘உங்களுக்கு ரொமான்ஸ் தெரியாதா? மேட்சிங்காக ட்ரெஸ் அணிந்திருக்கிறீர்களே..செல்லாது! செல்லாது!’ என ஒருபக்கம் அவர்களைக் கலாய்த்து வருகின்றனர். 


ஆராய்ச்சியாளர் அசியா ஐரோப்பிய அரசின் விசா கொள்கையால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான அசியா தனது ஆராய்ச்சிக்காக நீண்டகாலம் ஐரோப்பாவை விட்டு டெல்லியில் தங்கியதால் அவருக்கு அந்த நாடு கடந்த ஆண்டு விசாவை அப்டேட் செய்ய மறுத்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது அங்கே தங்கியிருந்த பிற ஆராய்ச்சியாளர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


சர்வதேசத்திலிருந்து பிரிட்டன் வரும் திறமையான ஆராய்ச்சியாளர்களை நாங்கள் எப்போதுமே வரவேற்போம் என அதிபர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார். ஆனால் அவரது அறிவிப்புக்கு முரணாக அந்த நாட்டின் புலம்பெயர்வுக் கொள்கை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறிவந்தனர். இதற்கிடையேதான் அசியாவின் விசாவும் மறுக்கப்பட்டிருந்தது. விசா மறுக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்தபடியே தனது ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் அசியா. இந்த நிலையில்தான் தற்போது தனது திருமணத்தையும் நிகழ்த்தியுள்ளார். 


சிம்பிள் ஜோடிக்கு ஸ்வீட் வாழ்த்துகள்! 

Also Read: சிவக்குமார்-ஸ்ரீகாந்த் வாய்ப்பை தட்டிப் பறித்த கமல்-ரஜினி: இப்படி தான் இளமை ஊஞ்சல் ஆடியது!