மனிதர்களுக்கு ஏற்படும் ஏராளமான மன நோய்களில் ஒன்றுதான் பைபோலார் டிசார்டர். ‘பைபோலார் டிசார்டர்’ என சொல்லக்கூடிய இந்த மனநோய் வருவதற்கு உண்மையில் யாரும் காரணமில்லை. அது மரபணு பாதிப்பால், உடலில் ஹார்மோன்கள் மற்றும் ரசாயனங்களின் சம நிலையின்மையால் வரக்கூடிய மனநோய். இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு இந்த மனநோய் இருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தற்கொலைகளுக்கு இந்த நோய் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தினர் இதனால் பாதிப்பில் இருந்தாலும், அவர்களுக்கு உதவுங்கள்


ஒவ்வொரு வருடமும்  10 அக்டோபர்’21 உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனநலன் பற்றி மக்களுக்கு அறிவுரை ஏற்படுத்தவும் அதுகுறித்த மூடநம்பிக்கைகளக் களையவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


முதன்முதலில் 1992ல்தான் இந்த நாள் உலக மனநலக் கூட்டமைப்பு என்னும் சர்வதேச மனநல அமைப்பால் அனுசரிக்கப்பட்டது. உடல்நலனைப் போல மனநலனும் மிகமிக முக்கியமானது. காய்ச்சல் போல அதனைச் சட்டெனக் கண்டுபிடித்துவிட முடியாது.அதனாலேயே மனநலன் மீது அதீத அக்கறை செலுத்தவேண்டியிருக்கிறது.’எனக்கு மனதளவில் இந்தப் பிரச்னை உள்ளது’ என எல்லோராலும் வெளிப்படையாகக் கூற முடிவதில்லை. சிலருக்கு தனக்கு மனம் சார்ந்த பிரச்னை உள்ளது என்பதே தெரியாது.


அது என்ன இருதுருவ மனநிலை?


ஒன்று, ‘மேனியா’ என சொல்லக்கூடிய அதீத உணர்வெழுச்சி. இதில்தான் கோபம், ஆத்திரம், துறுதுறுவென எப்போதும் நிரம்பி வழியும் ஏராளமான ஆற்றல், மனிதர்களின் மீது வன்மம், வெறுப்பு, தூங்காமல் பலவேலைகளை எடுத்துப் போட்டு செய்வது... இன்னும் சிலர் அளவுக்கதிகமான உற்சாகம், ஏராளமாக செலவு செய்வது, பணத்தை வாரி இறைப்பது என இருப்பார்கள். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது  இந்த நிலை இருக்கும்.


இன்னொரு துருவம், மனச்சோர்வு என சொல்லக்கூடிய டிப்ரஷன். இதில் என்னவென்றே தெரியாத மனபாரம், சோர்வு, எதிலும் ஆர்வமின்மை, தூக்கமின்மை, பசியின்மை, நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணங்கள் என இரண்டு வாரங்களாவது இருக்கும். இந்த இரண்டும் மாறி மாறி வரும் நோய்தான் இந்த ‘இருதுருவ நோய்’ என சொல்லக்கூடிய ‘பைபோலார் டிசார்டர்’.


இருதுருவ மனநிலையை கடக்க 10 டிப்ஸ்


1. நேரத்துக்கு தூங்கும் பழக்கத்தை வகுத்துக் கொள்ளுங்கள்:


இருதுருவ மனநிலை கொண்டவர்களுக்கு தூக்கம் மிகமிக அவசியம். அதனால் சீரான தூக்க பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.


2. சீரான உடற்பயிற்சி


மனநலன் பேண மிகவும் அவசியமானது உடற்பயிற்சி. குறுநடை, ஜாகிங் என சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். அது மூட் ஸ்விங்ஸ் ஏற்படாமல் பாதுகாக்கும்.


3. சமச்சீரான உணவு


உடல் ஆரோக்கியத்தைப் பேண சமச்சீரான உணவு உட்கொள்ளுதல் மிகவும் அவசியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள், ஹெல்த்தி ஃபேட்ஸ் என நிறைய சத்தான ஆகாரம் சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 


4. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்


மனதை ரிலாக்ஸாக வைக்க யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என ஜிண்டால் நேச்சர்க்யூர் மருத்துவமனையின் கன்சல்டிங் பிஸியாலஜிஸ்ட் டாக்டர் மால்ஸா குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.


5. போதையைத் தவிர்க்கவும்


மனநோய் உள்ளவர்கள் போதை தரும் வஸ்துகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும். ஒருவேளை பைபோலா டிசார்டர் சிகிச்சையில் இருந்து கொண்டு மதுவும் அருந்தினால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


6. மூட் ஜர்னல்


மூட் ஜர்னல் என்று ஒன்றை நிர்வகியுங்கள். எந்த விஷயம் அழுத்தத்தைத் தருகிறது. எது சாந்தப்படுத்துகிறது என்று குறிப்பெடுங்கள்.அதை பின்பற்றலாம்,


7. டைம்டேபிள் பின்பற்றலாம்


பைபோலார் டிசார்டர் உள்ளவர்களுக்கு மறதியும் குழப்பமும் இயல்பே. அதனால் டைம்டேபிள் போட்டு வேலைகளைத் திட்டமிட்டு பின்பற்றலாம்.


8. சிகிச்சையை முழுமையாக பின்பற்றுங்கள்


சிகிச்சையை முழுமையாகப் பின்பற்றுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.


9. உங்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளுங்கள்


உங்களை எந்த விஷயம் தூண்டுகிறது என்று பாருங்கள். அதை தவிர்த்துவிடுங்கள். 


10. துணையுடன் இருங்கள்


இருதுரவ மனநிலை உள்ளவர்கள் தனியாக எல்லாவற்றையும் கையாள்வது கடினம். ஆதலால் குடும்பத்தினர் நண்பர்கள் யாரேனும் சிலரின் துணையுடன் நோயை வெல்ல முற்படுங்கள்.