பசிக்கு சாப்பிட வேண்டும். ஆனால் சிலர் பசிக்காதபோதும் சாப்பிடுவார்கள். இதனை பிஞ்ச் ஈட்டிங் (binge eating) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இது ஒரு மன ரீதியான உபாதை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடே இல்லாமல் தோன்றும் நேரமெல்லாம் ஏதாவது சாப்பிட்டால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.
1. உடல் பருமன்
இன்று உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக உடல் பருமன் இருக்கிறது. அந்த எண்ணிக்கை 2035க்குள் 1.9 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ச்சியூட்டும் விஷயமாக குழந்தைகளையும் இந்த சிக்கல் விட்டுவைக்கவில்லை. அவர்களின் உடல் பருமன் 2020 மற்றும் 2035 க்கு இடையில் 100 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2035க்குள் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் உடல் பருமனாக இருக்கலாம் என்கிற அச்சமூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
பிஞ்ச் ஈட்டிங் என்ற நோயால் இதய நோய், டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியன ஏற்படலாம் என்று மருத்துவ உலகு எச்சரிக்கின்றது.
2. கேஸ்ட்ரோ இன்டஸ்டினல் பிரச்சனைகள்
பிஞ்ச் ஈட்டிங் பழக்கத்தால் கேஸ்ட்ரோ இன்டஸ்டினல் பிரச்சனைகள் வரலாம். ஆகையால் தவறான உணவுப் பழக்கங்களை கைவிடுங்கள். முறையான உணவுப் பழக்கத்துக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். மிக முக்கியமாக உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமாகும். அதிக அளவு உண்ணுதலை தவிருங்கள். நார்சத்து அதிகமுள்ள பொருட்களை உண்ணுங்கள். இது உங்கள் ஜீரண சக்தியை முறைப்படுத்தும். வாயு, வயிற்றுப் போக்கு, வயிறு வீக்கம் ஆகியவற்றைத் தடுக்கலாம்.
3. வளர்சிதை மாற்ற பிரச்சனைகள்
உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ரசாயன மாற்றங்களே வளர்சிதை மாற்றம் எனப்படுகிறது. வளர்சிதை மாற்றம் ஒரு (1) வயதில் உச்சத்தை அடைகிறது. 20 வயது முதல் 60 வயது வரை நிலையாக இருக்கிறது, அதற்குப் பிறகு தான் தவிர்க்க முடியாமல் குறைகிறது. அதிகமாக உணவு உண்பதால் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், மெட்டபாலிக் சிண்ட்ரோம், டிஸ்லிபிடீமியா அதாவது வழக்கத்துக்கு மாறான லிபிட் அளவுகள் போன்றவை ஏற்படுகிறது,
4. மன நல பாதிப்புகள்
அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கமும் மன அழுத்தம், மனப் பதற்றம், குறைந்த சுய மதிப்பீடு ஆகியனவும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாக உள்ளது.
5. ஊட்டச்சத்து குறைபாடுகள்
அளவுக்கு அதிகமாக உண்டாலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். எப்படி எனக் கேட்கிறீர்களா? கலோரி அடர்த்தி காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். வைட்டமின், மினரல் மற்றும் சில முக்கியமான நுண் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
6. கார்டியோவாஸ்குலர் நோய்கள்:
கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) என்பது இதயம் அல்லது ரத்த நாளங்களை (நரம்புகள் மற்றும் தமனிகள்) பாதிக்கும் நோய்களின் ஒரு வகை ஆகும்.
அதிகப்படியான உணவு உண்ணுதல் அதுவும் குறிப்பாக சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல் கார்டியோவாஸ்குலார் நோய்களை அதிகரிக்கும். பக்கவாதம் கூட ஏற்படும்.
7. உணர்வுச் சோர்வு
அதிகப்படியாக உண்பதால் இமோஷனல் டிஸ்ட்ரஸ் எனப்படும் உணர்வுச் சோர்வு ஏற்படுகிறது.
பிஞ்ச் ஈட்டிங்கை ஒரு ஸ்டேட்டஸாக கருதாமல் அது ஒரு நோய் என்பதை உணர்ந்து அளவோடு உண்டு வளமோடு வாழ்வோமாக. ஏனெனில் உணவே மருந்து என்று கூறிய திருமூலர் மந்திரம் நமக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளது.