நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.நல்லெண்ணெ யை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
சரும எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
சரும வறட்சிக்கு நிவாரணம்
பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
சிவப்பு உதடுகளுக்கு
நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
மேக்கப் ரிமூவர்
கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
பாத வெடிப்பிற்கு
நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
சருமக் கருமையை சரிசெய்ய
கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
வறண்ட தலைமுடிக்கு
உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.
கண் கருவளையங்களுக்கு
உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.நல்லெண்ணெயின் நல்ல பலன்களை நீங்களும் பயன்படுத்தி பெறுங்கள்...