பெண்களை விட ஆண்கள் சருமம் கொஞ்சம் கடினமாக இருக்கும். கூடுதல் அக்கறை எடுத்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். ஆண்கள் அதிகமாக வெளியில் செல்வதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சரும பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் தனியாக நேரம் ஒதுக்கி தினம் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை தனியாக சரும ஆரோக்கியம் மற்றும் அழகை பேணிக்காக்க வேண்டும்.
சருமத்தை அழகாக வைத்து கொள்ள செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ. மாய்சுரைசர் - நீண்ட நேர உடற்பயிற்சிக்கு பிறகு முகத்தில் வேர்வை அதிகமாக வரும். இதனால் எரிச்சல் ஏற்படலாம். மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சரும வறட்சி ஏற்படும். அதனால் இவற்றை தவிர்க்க மாய்சுரைசர் பயன்படுத்துவது அவசியம். ஒவ்வொருவர் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் எரிச்சல், நிறம் மாறுதல், முகப்பரு வராமல் தடுக்கும்.
பேஸ் பேக் பயன்படுத்துங்கள் - எண்ணெய் சுரப்பு அதிகமாக இருந்தால் முகப்பரு, முகக்கட்டிகள், வரும். அதனால் எண்ணெய் பசை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் ஃபேஸ் பேக் போடுவது, எண்ணெய் சுரப்பது குறையும். எண்ணெய் சுரப்பதால் முகத்தில் சேரும் கழிவுகள் நீங்கி சுத்தமாக இருக்கும். மேலும் சருமம் புத்துணர்வுடன் இருக்கும்.
தண்ணீர் - போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெப்பமான காலம், மழைக்காலம் என எந்த பருவ நிலையாக இருந்தாலும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் சத்து அதிகமாக இருந்தால் உடல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.
கிருமி நீக்கம் - நீண்ட நேரம் வெளியில் சென்று வருவதால் சருமத்தில் கிருமிகள், அழுக்குகள் சேர்ந்து முகத்தில் தங்கி, முகப்பரு, முகத்தில் கட்டிகள், கருப்பு புள்ளிகள், முகத்தில் சிறு துளைகள் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.அதனால் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும், எக்ஸ்ஃபோலியேட் சேர்ந்த குளியல் எடுப்பது அவசியம்.
தாடி பாகம் - தாடி பாகத்தில் தனி கவனம் எடுப்பது அவசியம். தாடி இருக்கும் இடத்தில் சருமம் மென்மையாக இருக்கும். தரமாக ஷேவிங் கிரீம்கள் பயன்படுத்தவும். உயர்தர ட்ரிம்மர்கள் பயன்படுத்த வேண்டும்.
உணவு - அதிக சர்க்கரை, எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெளி இடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே சாப்பிடுவது நல்லது. வீட்டில் சமைத்த ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எடுத்துக்கொள்வது, சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.