இன்றைக்கு பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று முடிக்கொட்டுதல். முடியிழப்பு என்பது உடலில் ஏற்படும் சத்து குறைபாடு என்பதை தாண்டி, சிலருக்கு உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இளம் வயதிலேயே வழுக்கையாவது என்பது, தன்னம்பிக்கையை குறைத்து விடுவதாக சில ஆராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கின்றன. இதற்காக மருத்துவ உலகம் இம்பிளாண்ட்டேஷன் என்னும் நவீன முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோபோல முடி கொட்டுவதை மையமாக வைத்தும் நிறைய கெமிக்கல் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் தலை முடி வளராதவர்களும் மீசை தாடி வளராதவர்களும் வெங்காயத்தை பயன்படுத்த பல இடங்களில் பரிந்துரைக்கப்படுகிறார்கள். உண்மையில் வெங்காயத்தை தேய்த்தால் முடி வளருமா ? என்ன சொல்கிறது இயற்கை மருத்துவம் ? என்பதை பார்க்கலாம்.
வெங்காயம் தேய்ப்பதனால் முடி வளருமா என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னால் , ஏன் முடி கொட்டுகிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் . முடி கொட்டுவதற்கு தலை முடியின் வேர்களில் , தலையில் ஏற்படக்கூடிய வறட்சி , பொடுகு , உடலின் வெப்பநிலை அதிகமாக இருப்பது, ஊட்டச்சத்தான பொருட்களை எடுத்துக்கொள்ளாதது,சத்து குறைபாடு ,ஸ்ட்ரைட்னிங், ப்ளோ ட்ரை உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவது, கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது, ஜெனட்டிக் காரணங்கள் என பல காரணங்களை முன்வைக்கின்றனர் மருத்துவர்கள். இந்த நிலையில் வெங்காயம் தேய்ப்பதால் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு , ஆம் ஆனால் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே என்கின்றனர் மருத்துவர்கள். வெங்காயத்தில் முடி ஆரோகியமாக வளர்வதற்கான சல்ஃபர் இயற்கையாகவே இருக்கிறது. இந்த சல்ஃபர் குறைபாடு காரணமாக உங்களுக்கு முடி கொட்டுகிறது என்றால் வெங்காயத்தை தேய்க்கும் பொழுது , முடியின் வேர்களை வலுவாக மாற்றி , முடி உதிர்வதில் இருந்து கட்டுப்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமால் தலையில் உள்ள பொடுகு , தொற்று , அரிப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும் வெங்காயச்சாறு பயன்படுகிறது.
சரி வெங்காயத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்துக்கொள்ளலாம் . வெங்காயத்தை நேரடியாக தேய்த்தால் முடி கொட்டுவதை இன்னும் அதிகப்படுத்தலாம் . முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி , அதனை அரைத்து, வடிக்கட்டி சாறு எடுத்துக்கொள்ளவும் . அதனுடன் 1:3 என்ற விகிதத்தில் சோற்றுக்கற்றாழை அல்லது தேய்ங்காய் எண்ணை கலந்து , தலையின் வேர் பகுதிகளில் படும்படி தேய்த்துக்கொள்ளவும்.1 மணி நேரம் ஊரவிட்டு தலையை ஷாம்பு அல்லாத இயற்கையான பொருட்களை கொண்டு வாஷ் செய்ய வேண்டும். இப்படியாக செய்தால் முடி உதிர்வை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல இளநரைக்கும் வெங்காய சாறு உதவியாக இருக்கும் எனவும் சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.