நாகரீக யுகத்தில் எல்லாமே அவசரம். சாப்பிட அவசரம், வேலைக்குச் செல்ல அவசரம் இப்படி நம்மைச் சுற்றி நாமே பிண்ணிக் கொண்ட வலையால் பல்வேறு லைஃப்ஸ்டைல் நோய்களை வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்றுதான் அஜீரணக் கோளாறு.


செரிமான கோளாறு:


செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால்  இந்தச் செரிமான நீர் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதுதான் அஜீரணம். உணவு சாப்பிட்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.


அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப்படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, நேரம் தவறி உண்பது, தூக்கமின்மை, ஓய்வின்மை, நாட்பட்ட பயணம், போதிய அளவு உடற்பயிற் சி செய்யாமல் இருப்பது போன்றவைகளால் அஜீரணம் ஏற்படும்.


அஜீரணக் கோளாறு:


சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சமச்சீர் உணவு வகைகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உண்ணுங்கள். அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். மேலும், தொடர்ந்து அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்.


ஆனால் நாம் தான் டாக்டரைவிட கூகுளை அதிகமாக நம்புகிறோமே. அதனால் அஜீரணத்துக்கு நாமே அன்டாசிட் மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். இதனைப் பலரும் நீண்ட காலமாக செய்து வருவதையும் நாம் பார்த்திருக்கலாம், குறிப்பாக மதுபானம் எடுத்துக் கொள்ளும் பலரில் ‘விவரம் அறிந்தவர்களாக’ தங்களை நினைத்து கொள்பவர்கள் காலையில் உணவு அருந்துவதற்கு முன்னதாக வெறும் வயிற்றில் ‘ரானிடிடின்’ அல்லது ‘ஒமிப்ர்சோல்’ ஆகிய அசிடிட்டி மாத்திரைகளை உட்கொள்வதும் உண்டு. மேலும் வலிநிவாரணி மாத்திரைகளுடன் இந்த அசிடிட்டி கட்டுப்பாடு மாத்திரைகளை சேர்த்து எடுத்துக் கொள்ளும் வழக்கமும் நம்மை விட்டு நீங்கா பழக்கமாகும்.


பிரச்சினைகள்:


இவையெல்லாம் நீண்டகாலமாகச் செய்து வந்தால் கிட்னி பிரச்சனையாக இருக்கலாம். அன்டாசிட்,ரானிடிடின், ஃபேமோடிடின், ஒமிப்ரசோல், லான்சப்ரசோல், போன்ற நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு ‘புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள்’ என்று மருத்துவ உலகில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. திடீரென கிட்னி பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளை உடனடியாக நிறுத்துவது வழக்கம்.


நெஞ்செரிச்சல் மருந்துகளை கண்டமேனிக்குப் பயன்படுத்தியவர்களில் 80% பேருக்கு கிட்னி பிரச்சினை உடனடியாக ஏற்படுவது தெரியாவிட்டாலும் உடலிலிருந்து சிறுநீர் வெளியாறாத பிரச்சினை ஏற்படும், களைப்பு, கணுக்கால், கால்களில் வீக்கம் ஏற்படும், இது கிட்னி பிரச்சினைக்கு ஒரு அறிகுறி. டாக்டர் ஸ்ரீஹரி இவ்வாறாக அன்டாசிட் சாப்பிடும்போது சில தவறுகளை சுட்டிக் காட்டுகிறார்.


ஒருபுறம் காபி, டீயை டம்ளர் டம்ளராக விழுங்கிக் கொண்டு இன்னொரு புறம் அன்டாசிடை சாப்பிடுவது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். நம் உணவுக்குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே ஸ்பின்ச்டர் என்ற வால்வு உள்ளது. இது திரவங்கள் செல்ல ஒரு பாதை ஏற்படுத்துகிறது. கஃபைன் உள்ளே செல்லும்போது அது அந்த வால்வை விரிவடையச் செய்யும். இதனால் அசிடிட்டி உண்டாகும். நாம் காபியுடன் அசிடிட்டி மாத்திரை எடுத்தால் பெப்டிக் அலர், கேஸ்ட்ரோ ஈஸோஃபேகல் ரிஃப்ளக்ஸ் நோயை உண்டாக்கும். குளிர் பானங்களிலும் கஃபைன் இருப்பதால் எனவே அத்துடனும் அசிடிட்டி மாத்திரைகளை சாப்பிடக் கூடாது.