சில நாட்களுக்கு முன்னதாக நான் நண்பர்களுடன் தங்கி இருந்த வீட்டை மாற்றி வேறு வீட்டிற்கு குடிப்பெயர்ந்தோம். அந்த வீட்டில் இரு கழிவறைகள். ஒன்று சுத்தம் செய்யப்பட்டும் மற்றொன்று சிறிது கறைகளுடனும் இருந்தது. வீட்டின் உரிமையாளரிடம் முறையிட்டும் அவர் எந்த ஒரு அசைவும் காட்டவில்லை. அதை நினைத்திருந்தால் நாங்களே சுத்தம் செய்திருக்கலாம். ஆனால், நாங்களோ 2கே கிட்ஸ் ஆயிற்றே..உடனே மொபைலை தட்டி இவ்வாறு கழிவறை சுத்தம் செய்யும் சர்விஸ் செய்து கொடுக்கும் ஆப்பை கண்டுபிடித்து கழிவறையும் சுத்தம் செய்யப்பட்டாகிவிட்டது.


இந்தியாவில் மலக்குழி மரணங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. என்னதான் மூலைக்கு மூலை சமூக நீதி, சாதிய அடக்குமுறை என பலரும் பேசி திரிந்தாலும் தோட்டிகளின் வாழ்க்கை என்னவோ மலக்கிடங்கோடுதான் முடிந்து போகிறது. இதுவரை நாம் மூக்கை பொத்திக் கொண்டு பார்க்க மறுத்த பல நூறு உயிர்களை காவு வாங்கிய மலக்குழிக்குள் ’தோட்டியின் மகன்’ என்ற நாவலின் வழியே கொஞ்சம் எட்டி பார்ப்போம் வாருங்கள்!


பொதுவாக எனக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும். கடந்த மாதம் நான் என் 21-வது பிறந்தநாளை கொண்டாடினேன். அப்போது நண்பர் ஒருவர் ‘தோட்டியின் மகன்’ புத்தகத்தை எனக்கு பரிசளித்திருந்தார். மலையாளத்தில் பஷீரின் எழுத்துகள் மட்டும்தான் எனக்கு அறிமுகம். தகழியின் எழுத்துகள் பரிச்சயம் இல்லை. அதனாலே என்னவோ தெரியவில்லை பிறந்தநாளுக்கு அடுத்த நாளே நான் தோட்டியின் மகனோடு அமர்ந்து விட்டேன்.


1947 ஆம் ஆண்டு மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையால் புனையப்பட்டு சுந்தர ராமசாமியால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல்  ‘தோட்டியின் மகன்’ .


கதைக்கரு :


திருநெல்வேலியில் இருந்து ஆலப்புழை நகருக்கு தோட்டி வேலை பார்ப்பதற்கு சில தோட்டிகள் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களுள் பலர் பல தொற்று நோய்களுக்கும் காலராவுக்கும் அவ்வப்போது பலியாகி விடுகின்றனர். அவ்வாறு கண்களிலிருந்து நீல திரவம் வெளியேறி உடல் அழுகி மண்ணோடு மக்கிப்போன தோட்டி இசக்கிமுத்துவின் மகன் சுடலை முத்து. சுடலை முத்துவின் மகன் மோகன். இவர்கள் மூவரை சுற்றியே கதை இயங்குகிறது.


இசக்கிமுத்துவுக்கு தன் மகன் சுடலைக்கு எப்படியாவது தோட்டி வேலை கிடைத்து விட வேண்டும் என்ற கனவு; சுடலைமுத்துவிற்கு தன் மகன் தோட்டியாகி விடக்கூடாது என்பது கனவு. இவர்களின் கனவு நிறைவேறியதா என்பதே இந்த நாவல்.




உடல் அழுகி கிடக்கும் தந்தையின் பிணத்தை புதைத்த கையில் வாளியும் மண்வெட்டியும் ஏந்தி தோட்டியாக கிளம்பிவிட்டான் சுடலை முத்து. அவன் மற்ற தோட்டிகள் போல் இல்லை. அவனுக்கு பணத்தை சேமித்து வைக்க தெரியும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட வேண்டும் என்ற ஜுவாலை அவன் நெஞ்சில் எறிந்து கொண்டிருந்தது. காதல் வயப்பட்டு வள்ளியை திருமணம் செய்கிறான்.


தங்கள் குழந்தையை தோட்டியின் குழந்தைபோல் இல்லாமல் ஊர்க்காரர்கள் வீட்டு பிள்ளைபோல் வளர்க்க எண்ணுகிறான் சுடலை. அவனுக்கு தோட்டிக்கு மறுக்கப்பட்ட ‘மோகன்’ என்ற பெயரை சூட்டுகிறான். பல தடைகளை தகர்த்து பள்ளிக்கு அனுப்பி எண்ணும் எழுத்தும் கற்க வைக்கிறான். தன் மகன் எக்காரணத்தினாலும் வாளியை கையில் எடுத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு தோட்டி செய்ய துணியாத..செய்ய நினைக்காத அனைத்தையும் செய்கிறான் சுடலை முத்து. கடைசியில் காலராவிற்கு சுடலையும் வள்ளியும் வயிறு ஊதி பலியாகவே வேறு வழியில்லாமல் மோகனுக்காக ஒதுக்கப்பட்ட தோட்டி தொழிலையே அவனும் செய்கிறான். மலத்தோடு சேர்த்து பெற்றோரின் கனவுகளையும் மலக்கிடங்கில் தள்ளி விட்டான் மோகன். அதன் பிறகு தோட்டிகள் சங்கம் உருவாக்கப்படுகிறது. சங்கத்தின் சார்பில் போராட்டம் செய்து நெஞ்சில் குண்டு வாங்கி மாய்ந்தும் போகிறான் மோகன்.


இவ்வாறு ஒரு தோட்டி அவனுக்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு போனாலும் மரணம்தான்..அதனை எதிர்த்து நின்றாலும் மரணம் தான்..எவ்வளவு பெரிய கொடுமை இது..?


மாடர்ன் உலகில் மலக்குழி மரணங்கள் : 


என்னதான் உலகம் டிஜிட்டல் மயம் ஆனாலும் நம் கழிவறைகள் நவீனமாக்கப்படாலும் நம்மிடையே தூய்மை பணியாளர்கள் என்ற பெயரின் கீழ் தோட்டிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் ஏன் மலம் அள்ளிய கையில் உணவுண்ண வேண்டும்..? அவர்கள் மட்டும் ஏன் மலத்தின் மணத்திற்கு பழகி போயிருக்க வேண்டும்..? மாடர்ன் காலம், டிஜிட்டல் எரா என பெருமை பீத்தி கொள்ளும் இதே நேரத்தில் தான் இத்தனை மலக்குழி மரணங்கள் நிகழ்கிறது. `தமிழ்நாட்டில்‌ 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை மலக்கழிவு அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்ட 55 பேர்‌ மாண்டு போயிருக்கின்றனர். அதிலும்‌ கடந்த 2022-ம்‌ ஆண்டில்‌ 8 மாதங்களில் 15-க்கும்‌ மேற்பட்டோர்‌ இறந்திருக்கின்றனர்.' இது தான் நம் மாடர்ன் இந்தியாவின் மறைக்கப்பட்ட, மறுக்க முடியாத உண்மை.




சாதாரணமாக ஒரு வாழ்க்கை வாழ, கனவுகள் காண மறுக்கப்பட்ட சமுதாயம் ஒன்று மலம் அள்ளியும், வாளியும் வாரியலும் ஏந்தி வாழ்ந்து மலம் அள்ளும் வண்டியை தள்ளியபடியே அம்மலக்கிடங்கிலே அதன் வாழ்கையை முடித்து கொள்கிறது. இது அநியாயத்தின் உச்சம் அல்லவா..? என்று ஒருநாள் நாம் விவசாயியின் மகன் விவசாயியாக தான் ஆகவேண்டுமா? என்ற கேள்வியை காட்டிலும் ஒரு தோட்டியின் மகன் தோட்டியாக தான் ஆக வேண்டுமா? என்ற கேள்வி கேட்பது முக்கியம் என்று நினைக்கிறோமோ? என்று ஒருநாள் மலம் ஒரு மனிதனின் கையால் அள்ளப்படுவது நிற்கிறதோ..என்று  ஒருநாள் ஒரு மலம் அள்ளும் தந்தையின் பெரும் கனவு நிறைவேறுகிறதோ.. அன்று வரை ஒரு ‘தோட்டியின் மகன்’ இருந்து கொண்டுதான் இருப்பான். இந்த குற்ற உணர்ச்சி நம் நெஞ்சை பிளந்து கொண்டுதான் இருக்கும். நாம் அனைவரும் இந்த உலகில் வாழ அருகதை இல்லாதவர்களாய் வாழ்ந்து கொண்டுதான் இருப்போம்...