ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக திருக்கோளூரில் நடந்த அகழாய்வு பணியில் 324 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்தனர்.




ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார்.  இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.




இந்நிலையில், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த வருட இறுதியில் முதல் முறையாக வாழ்விட பகுதிகளை கண்டறிவதற்காக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுடப்படாத மண் செங்கல், நான்கு தரைத்தளங்கள், சுடுமண் குழாய்கள், அடுப்பு, பானை ஓடுகள், பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், உடைந்த வளையல்கள், இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அகழாய்வு பணியில் இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாழ்விடப்பகுதிகளை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.




இதுபற்றி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, “தமிழக முதல்வர் உலக வரலாற்றை பொருநை ஆற்றங்கரையில் இருந்து தான் எழுதவேண்டும் என்று அறிவித்திருந்தார். தொடர்ந்து ஆய்வாளர்கள் வெளியிட்டு வரும் கருத்தை கேட்கும் போது பெருமையாக உள்ளது. தமிழக அரசு நெல்லை ரெட்டியார்பட்டி மலையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கையில் கிடைத்த பொருளை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். ஆதிச்சநல்லூர் ஒன்றிய அரசு உலகதரம் வாய்ந்த சைட் மியூசியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் சிவகளையின் முழு அறிக்கை வெளிவரும்போது உலகமே நம்மைகண்டு வியந்து போய் நிற்கும் காலம் வரும்” என்று கூறினார். பொருநை கரை நாகரீகம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை சொல்லும் காலம் விரைவில் தெரியவரும் என தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.