பிரபல தெலுங்கு நடிகை காவ்யா கல்யாண் ராம்  தனக்கு நேர்ந்த உருவக்கேலி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திரையுலகைப் பொறுத்தவரை பிரபலங்களுக்கு ஏற்படும் உருவகேலி, பாலியல் தொல்லை, தவறாக நடத்துதல் போன்ற பிரச்சினைகள்  குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். தற்போது மீ டூ இயக்கத்தில் வெளிப்படுத்தப்படும் குற்றச்சாட்டுகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் தெலுங்கு நடிகை காவ்யா கல்யாண் ராம்  தனக்கு நேரந்த உருவக்கேலி குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


நடப்பாண்டு மார்ச் மாதம் நடிகர் வேணு யெல்டாண்டி இயக்குனராக அறிமுகமான படம் “பாலகம்”.பீம்ஸ் சிசிரோலியோ இந்த படத்தில்  பிரியதர்ஷி புலிகொண்டா, காவ்யா கல்யாண்ராம், சுதாகர் ரெட்டி, கோட்டா ஜெயராம், மைம் மது மற்றும் முரளிதர் கவுட் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்தையும், அதில் நடித்த பிரபலங்களையும் பாராட்டினர். 


இந்த படத்தின் வெற்றியால் நடிகை காவ்யா கல்யாண் ராமுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் காவ்யா இதனிடையே அவர் அந்த பேட்டியில், “நான் ஆடிஷன்களில் கலந்து கொண்டபோது, ​​தான் குண்டாக இருப்பதாகவும், பருமனாக இருப்பதாகவும், ஹீரோயின்கள் ஒல்லியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று இயக்குனர்கள் அடிக்கடி கூறுவார்கள். உருவகேலியாக இருந்தாலும், அதனை நான் எதுவும் கண்டுக்கொள்ளாமல் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்துஆடிஷனுக்கு சென்றேன். தற்போது பாலகம் படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது” என தெரிவித்திருந்தார். 


பிரபலங்களின் கருத்து 


உருவக்கேலி தொடர்பாக பெண் பிரபலங்கள் தொடர்ந்து தாங்கள் சந்தித்த மோசமான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா ஜீரோ சைஸ் படத்துக்காக தனது உடல் எடையை பல மடங்கு அதிகரித்தார். ஆனால் அதுவே அவரை ரசிகர்கள் தாறுமாறாக விமர்சிக்க காரணமாக அமைந்தது. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் ஒல்லியாக காணப்பட்ட அனுஷ்கா, இரண்டாம் பாகத்தில் உடல் எடை அதிகரித்து இருந்தார். அதற்கு ஜீரோ சைஸ் படம் தான் காரணம் என ரசிகர்கள் தெரிவித்தனர். 


இதேபோல் காலா, வலிமை படத்தில் நடித்துள்ள நடிகை ஹுமா குரேஷியும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சொல்லிக் கொண்டே இருந்ததால் வாழ்க்கையில் மோசமான நிலை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.