வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வாங்குவது, குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் செய்வது, மதிய உணவு தயார் செய்வது, பணியிடத்தில் தொடர்ந்து வேலை செய்வது என இத்தனை தொடர் வேலைகளுக்கு இடையில் உங்கள் மாதவிடாய் நாள்களை மனதில் வைத்துக் கொள்வது சிரமமான காரியமாக இருக்கலாம். உங்கள் மாதவிடாய் சுழற்சி உங்கள் உடலின் நலம் குறித்து பல்வேறு விவரங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எனவே அதனைக் கண்காணிப்பது முக்கியமானது.
பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதற்காகப் பிரத்யேகமாக Period Pal என்ற ஸ்மார்ட்ஃபோன் ஆப் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை டாப்சி. தொடர்ந்து மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடிகை டாப்சி, `லாய்கா’ என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்காலத்தில் பெண்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதற்காக ஏன் ஆப்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நடிகை டாப்சியிடம் கேட்ட போது, `தற்போதைய சூழலில் பெண்கள் வீட்டு வேலைகள் மட்டுமின்றி வெவ்வேறு வேலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். எனவே மாதவிடாய் நாள் ஞாபகத்தில் இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வெறும் நினைவூட்டுவது மட்டுமின்றி, ஒரு நண்பரைப் போல Period Pal ஆப் செயல்படும்’ எனக் கூறியுள்ளார்.
மாதவிடாய் குறித்த தயக்கம் நீங்க வேண்டும் எனப் பேசியுள்ள நடிகை டாப்சி, `மாதவிடாய் என்பது நல்ல ஆரோக்கியத்திற்கான அடையாளம் என்றும், அது வெட்கப்பட்டு விலக்கப்படும் விவகாரம் அல்ல என்பதை உணர்த்துவதற்குப் போதிய ஆய்வுகள் இருக்கின்றன. மேலும் மாதவிடாய் என்பது இயற்கையாக நடப்பது; அது நோய் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள நடிகை டாப்சி, `பெண்கள் தங்கள் மாதவிடாய் விவகாரம் குறித்து பேசுவதற்குத் தயக்கம் காட்டுவதற்கான காரணம், அவர்களைச் சுற்றி ஆண்கள் இருப்பது. மாதவிடாய் குறித்து பேசினால் உடனிருக்கும் ஆண்கள் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம் பெண்களிடம் இருக்கிறது. ஆண்கள் கல்வி பெற்று, விழிப்புணர்வுடன் இருந்தால், பெண்களும் தைரியமாகப் பேசுவார்கள். இந்த விவகாரம் இயல்பானதாக அணுகப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
மாதவிடாயை நேர்மறையாக அணுகுவது குறித்து பேசியுள்ள நடிகை டாப்சி, `மாதவிடாய் என்பது ஆரோக்கியமான ஒன்று என்பதையும், அது நோய் அல்ல என்பதையும் முதலில் மனதில் கொள்ள வேண்டும். மாதவிடாய் நேரத்தின் போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து படித்து, அதன் குறித்து கவனம் கொள்வதும் பெண்களுக்குப் பெரிதும் பயன்படும்’ என்று கூறியுள்ளார்.
Period Pal ஆப் பயன்படுத்தும் போது, நேப்கின் பயன்பாடு குறித்த விவரங்களைப் பதிவிட்டால் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, எத்தனை நேப்கின்கள் வாங்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஆன்லைனில் தானாகவே ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைக்கும் வசதியும் இந்த ஆப்பில் இருப்பது தனக்கு மிகவும் பிடித்த சிறப்பம்சம் என்றும் நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.