சேலத்தில் எந்த வார்த்தையை கூறினாலும், அதற்கு உடனடி கவிதைகளை கூறி, அனைவரையும் வியக்க வைக்கும் இல்லத்தரசி சாந்தினி. கால்நடைகளை மேய்த்துகொண்டே, கவிதை எழுதும் திறனை வளர்த்துக்கொண்ட பெண் குறித்த செய்தி தொகுப்பு பார்ப்போம்.



சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விநாயகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தினி (28), இவரது கணவர் அர்த்தநாரி இருவருக்கும் நித்தின் (7) என்ற குழந்தை உள்ளது. இவரது குடும்பம் விவசாயப் பின்னணியில் கால்நடைகள் பராமரிப்பு, விவசாய மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவரும் தினசரி கால்நடைகளைப் பராமரித்து கொண்டு வீட்டு வேலை செய்து வரும் இல்லத்தரசியாக இருந்தாலும், தனது திறமையை வெளி உலகத்திற்கு எப்படியாவது கொண்டு வரவேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள சாந்தினி கவிதை எழுவதில் அதிக திறமை கொண்டவராக இருப்பதால் எந்த வார்த்தையை கூறினாலும், அதற்கு உடனடியாக ஒருவரி முதல் ஐந்து வரிகளுக்கு மேலும் கவிதைகளை கூறி, அனைவரையும் வியக்க வைக்கிறார். கால் நடைகளை பராமரிக்கும் நேரம், வீட்டு வேலைகளை முடித்த பிறகும் இருக்கும் சிறிய ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படித்தும், தனது கற்பனைகளாலும் பல்வேறு கவிதை சொல்லும் திறமைகளை வளர்த்து வைத்துள்ளார். இதற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து கைவிட வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார். இருப்பினும் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் தனது திறமையை வெளிக்காட்டும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்கு முதல் படியாக ஜாக்கி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு என்ற புத்தகத்தில் 48 நிமிடங்களில் 150 வார்த்தைகளுக்கு உடனடி கவிதைகளை கூறி சாதனை படைத்துள்ளார். இந்த 150 வார்த்தைகளும் 5 வரிகளுக்கு மேலான கவிதைகளாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இது மட்டும் போதாது உலகிற்கும் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து வருகிறார். தற்போது 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு கவிதைகள் சொல்லும் அளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்டுள்ள சாந்தினி எப்படியாவது தனது திறமையை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார்.


மேலும் இது குறித்து சாந்தினி கூறும்போது இல்லத்தரசி என்று வீட்டிலேயே முடங்கி விடாமல் தங்களுக்குள் உள்ள திறமைகளை வயதைப் பொருட்படுத்தாமல் வெளிக்கொண்டு வந்து வெற்றி பெற்றால் பல்வேறு பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறும் என்றும் கூறுகிறார். பெண்கள் நினைத்தாள் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக சாந்தினி விளங்கி வருகிறார்.