புரதச் சத்துகளின் இருப்பிடமாக கருதப்படும் முட்டைகள் தினமும் உண்ணப்பட வேண்டியவை எனப் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும், சமீபத்திய ஆய்வு ஒன்றில், தினமும் ஒரு முட்டையையோ, அதற்கும் மேல் உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் சுமார் 60 சதவிகிதம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஊட்டச்சத்து இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரையில் முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து சுமார் 8 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் அதிக முட்டைகளை உண்பவர்கள் அதிகம் சோர்வுடன் இருந்ததாகவும், அவர்களது கொழுப்பு அளவுகள் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது,
தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றில், இந்தப் பிரச்னை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலின் என்ற வேதிப்பொருள் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான வீடுகளில் காலை உணவில் முட்டைக்குத் தனிப்பங்கு உண்டு. மேலும், புரதச் சத்து அளிக்கும் மிக முக்கிய உணவுப் பொருளான முட்டையில், அரை கிராம் கார்போஹைட்ரேட் இருப்பதாக குருகிராம் பகுதியைச் சேர்ந்த பராஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் நேஹா பதானியா கூறியுள்ளார்.
மும்பையின் பாட்டியா மருத்துவமனையைச் சேர்ந்த நீரிழிவு நோய் மருத்துவ நிபுணரும், மருத்துவருமான ஷைவால் சண்டாலியா, `முட்டைகளும், குறிப்பாக அதன் வெள்ளைக் கருவும், நமக்கு கிடைக்கும் புரதச் சத்துகளின் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. எனினும், முட்டைகளுக்கும், நீரிழிவு நோய்க்கும் இடையில் இத்தகைய மோசமான உறவு இருப்பது அதிர்ச்சி தருகிறது’ எனக் கூறியுள்ளார்.
இந்த ஆய்வுகளின் முடிவுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், முட்டை உண்பது அதிகரித்திருப்பதோடு, சீனாவில் முட்டை வாங்குவதும் அதிகரித்திருப்பதாகவும், இதனால் சீனாவில் காய்கள் உண்ணும் பழக்கம் குறைந்து, கறி உள்பட அதிக கொழுப்பு நிறைந்த உணவு உண்ணும் பழக்கம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கோழி முட்டைகள் எளிதில் பெறக் கூடியதாக இருப்பதால், அவை மலிவு விலையில் புரதம் முதலான பல்வேறு ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவாக இருக்கின்றன. மேலும் அவை அதிக கொழுப்பு நிறைந்ததாக உள்ள போதும், பிற உணவுப் பொருள்களைப் போல உடலில் கொழுப்பு அளவை அதிகரிப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் ஷைவால் சண்டாலியா தொடர்ந்து, `எனினும் அதிக எண்ணிக்கையில் மஞ்சள் கருவுடன் முட்டைகள் உண்ணப்பட்டு, அவற்றோடு வெண்ணெய், எண்ணெய், பாலாடை முதலானவை உண்ணப்பட்டால் அது உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு அளவுகள் அதிகரிப்பு ஆகியவற்றோடு நீரிழிவு நோயையும் ஏற்படுத்துகின்றன. தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் உண்பது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது’ எனக் கூறுகிறார்.
ஒரு பெரிய முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொழுப்பு இருப்பதாக கூறும் நேஹா பதானியா, `இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. எனவே முட்டையை எளிதில் உண்பதற்கு அதனை வேக வைத்து, அதனோடு உப்பு, மிளகு, மல்லி இலைகள் முதலானவை சேர்க்கலாம் அல்லது இரண்டு முட்டைகளை வைத்து ஆம்லேட் செய்தும் உண்ணலாம். எனினும் இவற்றை அளவாக உண்ண வேண்டும்’ என்று கூறியுள்ளார்.