அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்! ஆம் அதுவும் குழந்தையின் பரிசுத்தமான அன்புக்கு ஈடு இணையே இல்லை. அந்த வகையில் 6 வயது குழந்தை ஒன்று குறும்புக்குப் பின் வரைந்த அன்புக் கடிதம் இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அந்தக் கடிதத்தைப் படித்தால் போதும் நீங்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் சரி அதிலிருந்து மீண்டுவிடுவீர்கள். அப்படி என்னதான் அந்த சுட்டிக் குட்டி எழுதினால் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. ஒரே வாக்கியம் தான் எழுதியுள்ளார். ஆனால் அது ஒரு காவியத்துக்கு ஈடானது. 






அன்புள்ள அம்மா. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் நாளை நான் கடினமானதாகிவிட்டிருந்தால். ("Dear mom, I am sorry if you had a ruf (rough) day.") என்று எழுதியுள்ளார். அந்தக் குழந்தை அந்த நாளில் ஏதோ சுட்டித் தனத்தை சற்று கூடுதலாக அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும். அது அந்த தாய்க்கு அன்றைய நாளை அயர்ச்சியானதாக மாற்றிருக்கலாம். அதை உணர்ந்து கொண்ட சிறுமி அன்னையின் சோர்வுக்கு அன்பால் மருந்து பூசியுள்ளார். இதை வாசித்ததும் அந்த அன்னைக்கு எத்தனை இதமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே உள்ளம் உருகுது.


அன்னை அதை தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த அன்பு மடலைப் பகிர்ந்து, இப்போது தான் எனது 6 வயது குழந்தையின் இந்தக் குறிப்பைப் பார்த்தேன். என் உயிர் உள்ளவரை இதை பத்திரமாக வைத்துக் கொள்வேன் என்று கூறினார். 


இணையவாசிகள் இந்தப் பகிர்வை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். ஆயிரக் கணக்கானோர் இதைப் பகிர்ந்துள்ளனர். லைக் செய்துள்ளனர். ஒரு ட்விட்டராட்டி இதைப் படிக்கும்போது என் தொண்டையில் உணர்ச்சிகள் அடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.


இன்னொரு நபர், இதேபோல் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு. என் மகளின் லஞ்ச் பாக்ஸில் அன்றாடம் ஏதேனும் ஒரு வாசகம் எழுதி வைப்பேன். அதுபோல் ஒரு நாள் என் மகள் எனக்கு பதில் துண்டு சீட்டு வைத்திருந்தார். ஐ லவ் யூ மம்மி என்று எழுதி அருகே ஒரு சிறிய பூ வரைந்திருந்தார். அது இன்னும் என் வீட்டுச் சுவரில் ப்ரேமில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிக் கொடுத்தது இன்றும் நினைவில் நிற்கிறது. நீங்களும் இதை ஃப்ரேம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். 


உண்மையில் மகள்களைப் பெற்ற அப்பா மட்டும் பாக்கியவான் அல்ல அம்மாக்களும் பாக்கியவதிகள்தான் போல!!