இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவுடன் தன்னுடைய புதிய பாடலான `முசாஃபிர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். எனினும், இந்த வாரம் காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். இதனைக் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர், `கொரோனா தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைக்கும், பிந்தைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு.. காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.. ஆனால் உங்களோடு நேரம் செலவழிக்க அழகான, ஊக்கமூட்டுகிற, சுறுசுறுப்பான மருத்துவர்கள் இருக்கும் போது, உங்கள் உடல் பிரச்னைகள் பெரிதாகத் தெரிவதில்லை. எனது மருத்துவர் பிரித்திகா சாரியுடன்.. பெண்கள் தினத்திற்கு முந்தைய நாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.
ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் இந்தப் பதிவுக்குப் பல்வேறு ரசிகர்களும், பிரபலங்களும் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப விரும்புவதாக கமெண்ட்களில் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் தன்னுடைய புதிய பாடலுக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றிருந்தார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் அவரது முன்னாள் கணவர் தனுஷ் தங்கியிருந்தது பேசுபொருளானது.
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி கடந்த ஜனவரி மாதம் தங்கள் பிரிவை அறிவித்த போது, அது பேசுபொருளாக மாறியது. சமூக வலைத்தளங்களில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கையில், `18 ஆண்டுகளாக ஒன்றாக நண்பர்களாக, இணையாக, பெற்றோராக, நலம்விரும்பிகளாக ஒருவருக்கு ஒருவர் இருந்தோம். இந்தப் பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சகிப்புத்தன்மை, ஏற்றுக் கொள்ளுதல் முதலானவை நிரம்பியிருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் இருவரும் நிற்கிறோம். ஐஷ்வர்யாவும், நானும் தம்பதியாக இருப்பதில் இருந்து பிரிந்து, தனிமனிதர்களாக எங்களைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக் கொள்ள போகிறோம். எங்கள் முடிவை மதிப்பதோடு, தனிப்பட்ட விவகாரத்தை எதிர்கொள்ள எங்களுக்கு நேரம் தேவை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். ஓம் நமச்சிவாய! அன்பைப் பரப்புவோம்’ என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார் நடிகர் தனுஷ்.