உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு, பொது முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நாடுகள் சற்று இயல்பு நிலைக்கு திரும்பினாலும், இரண்டாவது அலையின் காரணமாக தற்போது மீண்டும் ஊரடங்கை அறிவித்து வருகின்றன. இந்தியாவிலும் தற்போது இரண்டாவது அலையின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதனால் மீண்டும் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களின் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் தம்பதிகள் இடையே நிறையே பிரச்னைகள் வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பிபிசி ஆங்கில தளத்தின் ஆய்வின் படி கடந்த 2020 ஜூலை முதல் அக்டோபர் வரை பிரிட்டனில் அதிகளவில் விவாகரத்து தொடர்பான வழக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த கால கட்டங்களில் விவாகரத்து பெற வழக்குறிஞர்களை நாடுவோர் எண்ணிக்கையும் 122 சதவிகிதம் அதிகரித்ததாக தெரியவந்தது. பிரிட்டனில் ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. 


இந்த பிரச்னை பிரிட்டன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இருந்தது. குறிப்பாக இந்தியாவிலும் ஊரடங்கு காலத்தில் தம்பதிகள் மற்றும் காதலர்கள் இடையே பெருமகளவில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் காதல் தம்பதிகள் சிலர் பிரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஊரடங்கு காலத்தில் காதலர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன?




பொதுவாக தம்பதிகள் இருவர் சேர்ந்து நேரம் செலவிடும் போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள முடியும் என்பார்கள். அதேபோல் காதலர்கள் நீண்ட இடைவேளை பிரிந்து இருந்தாலும் அவர்களுக்கு இடையே காதல் கூடும் என்பார்கள். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு இந்த இரண்டு கூற்றுகளும் பொய்யாகும் வகையில் இருந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் தம்பதிகள் இருவரும் வீட்டிற்குள்ளேயே முடங்க இருக்க வேண்டிய சூழல் உருவானது. அதேபோல் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழலும் உருவானது. இந்த இரண்டு வாழ்வியல் சூழல்களிலும் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.


பெர்ஷனல் ஸ்பேஸ்:




கொரோனா காலத்தில் காதல் தம்பதிகள் இருவரும் ஒரே வீட்டிற்கு முடங்கி இருப்பதால் அவர்கள் எப்போதும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இருந்த பெர்ஷன்ல் ஸ்பேஸ் மிகவும் குறைந்தது. இது அவர்கள் இருவருக்கும் பிரச்னைகளை ஏற்படுத்த ஆரம்பித்தது. 


பொருளாதார சூழல்:




கொரோனா தொற்று காலத்தில் பலர் தங்களுடைய வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களின் பொருளாதார நிலை சற்று குறைய தொடங்கியது. இந்த பொருளாதார நிலை அவர்களுக்குள் பிரச்னையை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. உதாரணமாக தம்பதிகள் இருவர் வேலைக்கு செல்லும் வீட்டில் ஒருவர் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டால் அது தம்பதிகள் இடையே பெரிய வாக்குவாதம் மற்றும் சண்டைக்கு வழி வகுத்தது. 


சலிப்பு:




தம்பதிகள் இருவரும் ஒரே வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் அவர்கள் ஒருவரின் ஒருவர் முகத்தை மட்டும் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சலிப்பு தன்மை ஏற்படும் சூழல் உருவானது. அதன் காரணமாக அவர்கள் இருவருக்குள்ளும் சிறிய சண்டைகள் பெரிதாக மாற தொடங்கியது. 


சரியான தகவல் பரிமாற்றம் இல்லை:




மேலும் தம்பதிகள் இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருவதால் இருவரும் தங்களது வேலைகளில் மூழ்கி இருக்கும் நிலை உள்ளது. இதனால் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரியாக தகவல் பரிமாறி கொள்ளவும் சரியான நேரம் கிடைக்கவில்லை. அத்துடன் அவர்கள் இருவரும் தங்களுடைய கணினி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். 




வீட்டு வேலை செய்வதில் சிக்கல்:


கொரோனா காலத்தில் வீட்டு வேலை செய்யும் உதவியாளர்கள் யாரும் வீட்டிற்கு வராததால் அனைத்து வீட்டிகளையும் தம்பதிகளே பார்த்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதில் யார் யார் எந்தெந்த வீட்டு வேலையை செய்வது என்பது தொடர்பாக தம்பதிகளிடையே பெரும் பிரச்னை எழுந்துள்ளது. அதில் குறிப்பாக பல இடங்களில் பெண்களே வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை என இரண்டையும் பார்த்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இதுவும் தம்பதிகள் இடையே பெருமளவில் சண்டை மற்றும் கருத்து வேறுபாடுகள் வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 


 


ஒரே வீட்டில் இருக்கும் தம்பதிகளுக்கு இந்த நிலை என்றால் வெவ்வேறு இடங்களில் இருக்கும் காதலர்களுக்கும் பிரச்னை தான். நீண்ட நாட்கள் நேரில் சந்திக்க முடியாதது அவர்களுக்கு பெரிய பிரச்னையாக அமைந்துள்ளது. அத்துடன் இருவரும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசி கொள்ளும் நேரமும் குறைந்துள்ளது. இது அவர்களிடையே இருக்கும் காதலை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது. பணி சுமை மற்றும் குடும்ப சூழல் அவர்களை சற்று காதல் உறவிலிருந்து வெளியே தள்ளியுள்ளது. 


மேலே கூறப்பட்டுள்ள காரணங்களால் சில தம்பதிகள் காதல் உறவை முறித்து கொள்ளவும், விவாகரத்து செய்து கொள்ளவும்  முடிவு எடுத்து வருகின்றனர். கொரோனா லாக்டவுனும் உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.