மாலத்தீவு:




தீவு என்றாலே நம் மனதில் பட்டென நினைவுக்கு வருவது மாலத்தீவு தான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் கூட்டம் தான் மாலத்தீவு. அழகழகான கடற்கரைகள், தரை தெரியும் தண்ணீரின் தெளிவு, கடல் காற்றும், கடல் நீரும் என சுற்றுலாப்பயணிகளை கட்டிப்போடும் வசீகரம். மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு, சன் ஐலேண்ட், அலிமதா தீவு,  பனானா ரீஃப், என மாலத்தீவில் பார்க்கவேண்டிய இடங்கள் ஏகபோகம். கடலுக்கு மேலே பறந்தும் ரசிக்கலாம், கடலுக்கு உள்ளே சென்றும் ரசிக்கலாம். அதனால் தான் பிரபலங்கள் மாலத்தீவில் வரிசை கட்டுகின்றனர். வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் சென்றுவிட வேண்டிய ஒரு முக்கிய சுற்றுலாத்தளம்.


சீசெல்சு: 




கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கிமீ கிழக்கே உள்ள ஒரு தீவுக்கூட்டம்தான் சீசெல்சு. வெள்ளை மணல் போர்த்திய கடற்கரையால் மனம் கவரும் அழகிய தீவு இது. இயற்கை காதலர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத இடம்.  இது இயற்கையில் சொர்க்கம். காடுகள், கடற்கரைகள் என சீசெல்சில் ரசிக்க பல இடங்கள் உண்டு. தனித்துவமான கலாச்சார பாரம்பரியங்கள்  கொண்ட உள்ளூர் இன மக்கள் மக்கள் வசித்தாலும், பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை. அதனால் அங்கு இயற்கையே குடிகொண்டுள்ளது. சீசெல்சில் மஹே, பிரஸ்லின் மற்றும் லா டிக்யூ ஆகிய 3 தீவுகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு அழகை கொண்டிருக்கும். மஹே தீவு மிகப்பெரிய தீவு ஆகும். இங்கு மக்கள் வசித்தாலும், சுற்றுலாப்பயணிகளுக்கு மிக முக்கிய தீவு. காடு, நீர்வீழ்ச்சி என இயற்கை போர்த்திய தீவு பிரஸ்லின். பழமை மாறாத தீவாக லா டிக்யூ. ஒரே பயணத்தில் பல அனுபவங்களை அனுபவிக்க வேண்டும் என்றால் சீசெல்சுக்கு விசிட் அடிக்கலாம்.


கிரீட்:




கிரேக்க தீவுகளில் உள்ள அழகான ஒரு இடம் தான் கிரீட். கிரேக்க கலாசாரத்தை எதிரொலிக்கும் இடமாக இருக்கிறது கிரீட்.நகரங்கள், கடற்கரைகள், பள்ளத்தாக்குகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள் என அனைத்தையும் ரசிக்கலாம் கிரீட் பகுதியில். அனைத்து முக்கிய இடங்களையும் எளிதாக இணைக்கும் வழித்தடங்கள், செலவு குறைவு என கிரீட் செல்ல பாசிட்டிவ் விஷயங்கள் பல உள்ளன. 


 மொரிஷியஸ்:




ஆப்ரிக்காவில் உள்ள ஒரு பணக்கார இடம்  மொரிஷியஸ்.வெள்ள நிற கடற்கரையால் ஆன ஒரு வெப்ப மண்டல சொர்க்கம். பசுமையான தாவரங்கள், அழகிய கடற்கரைகள், கலாசார விஷயங்கள் என ரசிக்க வேண்டிய கதைகள் மொரிஷியஸில் நிறைய உள்ளன. மலையேற்றங்கள், தேசிய பூங்காங்கள், கடற்கரை நீர் சாகங்கள், ஓய்வெடுக்க ரிசார்ட்டுகள் என மொரிஷியஸில் வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆன்மீக விருப்பம் கொண்டவர்களுக்கும் அங்கு இடம் உண்டு. 


பிஜி:




தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிக அழகிய தீவுக்கூட்டங்களில் ஒன்றுதான் பிஜி. பிஜிக்கு உட்பட்ட தீவுகள் அனைத்துமே அழகால் நிறைந்தவை. கடல் பூங்காக்கள், பள்ளத்தாக்குகள், சதுப்புநில காடுகள், நீர்வீழ்ச்சிகள், பவளப்பாறைகள் மற்றும் இயற்கை குளங்கள் என ஒரு சொர்க்கம்தான் பிஜி. கடலில் சுறாவுக்கு போட்டியாக நீந்தலாம், காட்டில் அட்வெஞ்சர் பயணம் செல்லலாம், கடல் ஆமைகளை கொஞ்சி ரசிக்கலாம். தேனிலவு செல்ல விரும்புபவர்களுக்கும், சாகச பயணம் செல்ல விரும்புபவர்களுக்கும் இந்த பிஜி சூப்பர் சாய்ஸ்.