உங்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தாலோ அல்லது விட்டு விட்டு காய்ச்சல் இருந்தாலோ கீழ் காணும் ஐந்து நோய் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடலில் காய்ச்சல் அடிக்கிறது என்றால் நம்மில் நிறைய பேர் அருகில் இருக்கும் மருந்தகங்களில் மருந்தை வாங்கி சாப்பிட்டு விட்டு காய்ச்சல் சற்று சரியானதும் நம்முடைய அன்றாட வேலைகளை செய்ய போய் விடுவோம்


உடலில் ஏற்படும் காய்ச்சல் என்பது உடலின் மொழியில் உடலில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிவிப்பதாகும். இதை நிறைய மக்கள் புரிந்து கொள்ளாமல் காய்ச்சல் என்பதை தனிப்பட்ட ஒரு நோயாக பார்த்து அதற்கு மட்டும் சுய மருத்துவம் செய்து கொள்கிறார்கள் இது முற்றிலும் தவறானது.


பொதுவான காய்ச்சல்:
தற்போதைய மழைக்காலத்தில், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்,மற்றும் மழையில் நனைவதினால் ஏற்படும் உடல் வெப்ப மாறுபாட்டினால், உடலில் காய்ச்சல் ஏற்படுவது சகஜமான ஒரு விஷயம். ஆனால்,வெப்பநிலை மாறுபாட்டினால் தான்,இந்த காய்ச்சல் உருவானது என்பதை மருத்துவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.


ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல்.
அதிக குளுமையோ அல்லது அதிக வெப்பமான உணவுப் பொருட்களையோ உண்ணும் போது, உடம்பில் இயற்கையாகவே, ஜலதோஷம் ஏற்பட்டு,அதன் விளைவாக காய்ச்சல் உண்டாகிறது. இத்தகைய காய்ச்சல், ஜலதோஷத்தினால் மட்டும்தான் உண்டானது என்பதை உறுதி செய்து கொண்டால்,பயமில்லை.


காசநோய்:
மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் காசநோய் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா பொதுவாக நுரையீரலைத் தாக்கும். மேலும் சிறுநீரகம், முதுகெலும்பு மற்றும் மூளை போன்ற உடலின் மற்ற பகுதிகளைத் தாக்கும். இதில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது LTBI எனப்படும் மறைந்திருக்கும் காசநோய் தொற்று மற்றொன்று வெளிப்படையாக தெரியும் காச நோய் தொற்று. காசநோய் ஒரு ஆபத்தான நோயாகும். எனவே சரியான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அவசியம். காய்ச்சல் காசநோய்க்கான பொதுவான அறிகுறியாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் விட்டுவிட்டு அதிகப்படியான காய்ச்சல்  பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடம்பில் இருக்கும்  எனவே தகுந்த மருத்துவரிடம் காண்பித்து  காச நோயா அல்லது வெறும் காய்ச்சலா என்பதை  பரிசோதித்து கொள்வது அவசியம்.


வைரஸ் தொற்றுகள்:
ஜலதோஷம், காய்ச்சல்,எபோலா மற்றும் கோவிட்-19 போன்ற கடுமையான நோய்கள் வைரஸ் தொற்றினால்  ஏற்படும். இத்தகைய புரதம் செறிந்த சிறிய கிருமிகள், சாதாரண செல்களை ஆக்கிரமித்து, அவற்றைப் பெருக்கி, அதிக வைரஸ் செல்களை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உடலுக்கு சம்பந்தமில்லாத, வைரஸ்,பாக்டீரியா,உலோக மற்றும் மரப்பொருட்கள் என எத்தகைய உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்களாக இருந்தாலும், உடலானது காய்ச்சலுக்கு ஆட்படுகிறது.


சிறுநீர் பாதை நோய் தொற்று:
சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI என்பது,சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் தொற்று ஆகும். இது உங்கள் சிறுநீர்க்குழாய், சிறுநீரகங்கள் அல்லது சிறுநீர்ப்பையை ஆகிய பகுதிகளில் ஏற்படுகிறது.சிறுநீரில்  பாக்டீரியாக்கள் இல்லை. உடலுக்கு வெளியில் இருந்து நுண்ணுயிர்கள், சிறுநீர் அமைப்பிற்குள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அவ்வாறு இந்த நுண்ணுயிர்கள் வரும்போது,சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் வீக்கம்,ரத்தக் கசிவு, இவற்றின் காரணமாக நம் உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது.
 
நிமோனியா:
நிமோனியா  நமது இரண்டு நுரையீரல்களில் உள்ள காற்றுப் பைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தொற்று ஆகும். காற்றுப் பைகள் எப்போதும் சுத்தமாக நம் உடலால் பராமரிக்கப்படுகிறது. சளி,சீழ், ​குளிர் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை நுரையீரல் சுத்தம் இன்மையால் ஏற்படுகிறது. பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களால் நிமோனியா ஏற்படலாம். இது உடனடியாக மரணத்தை ஏற்படுத்தாது என்று போதிலும்,ஆஸ்துமா தொற்று உள்ளவர்கள்,குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகியோருக்கு,மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது,என்பதை மறுப்பதற்கு இல்லை.இப்படி நிமோனியா பாதிப்பினால் கூட நம் உடம்பில் அதிகப்படியான காய்ச்சல் ஏற்படுகிறது.


இப்படியாக,மேற் சொன்ன காரணங்களில் மூலம் ஏற்படும் காய்ச்சலை கவனத்தில் கொண்டு, தகுந்த மருத்துவரிடம் பரிசோதித்து, காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து,மருந்து உட்கொள்வது மிக அவசியமாகும்.