மனித உடலில் ஓய்வில்லாமல் எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு எது என்று கேட்டால் அது இதயம் என்று சொல்லலாம்.கருவறையில் நாம் உருவாகும் நேரத்தில்,எப்போது இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கின்றதோ,அன்றிலிருந்து அந்த மனிதன் இறக்கும் தருவாய் வரை,ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு உறுப்பு எதுவென்று கேட்டால் அது இதயம்.
ஆகவே அந்த இதயத்தை சரியானபடி பாதுகாப்பது,ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.சரி,இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது.அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, அதிகப்படியாக கோபம் அடையாமல் இருப்பது மற்றும் அதிகப்படியான படபடப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை இதயத்தை எப்பொழுதும் ஒரே சீரான துடிப்புடன் வைத்திருக்கும்.இப்படியாக இதயத்தை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமே நீங்கள் அதற்குத் தரும் ஆகச்சிறந்த பாதுகாப்பாகும்.
காய்கறிகள் மற்றும் பழங்களை நிறைய உண்ணுங்கள்:
காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய உயிர் சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.இவற்றில் கொழுப்பு மூலக்கூறுகள் அவ்வளவாக கிடையாது.ஆகவே காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் போது, ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதோ அல்லது கொழுப்புகள் சிறை மற்றும் தமனி எனப்படும் ரத்த ஓட்ட பாதைகளில் கொழுப்பாக படிவதோ கிடையாது.
மேலும் இத்தகைய பழங்களில் அதிக கலோரிகளும் கிடையாது.ஆகவே இது உங்கள் உடலுக்கும் இதயத்திற்கும் ஆகச் சிறந்த உணவாகும்.
தானிய உணவுகளுக்கு மாறுங்கள்:
வேக வைத்த பச்சைப்பயிறு, பட்டாணி, சுண்டல், சோளம், காராமணி,மொச்சை மற்றும் வேர்க்கடலை போன்ற தானிய வகை உணவுகளுக்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக,மாவாக மாற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட தானிய மாவுகள், செரிமானத்திற்கு உகந்ததாக இருக்காது. மேலும் மாவுகளில் நார்ச்சத்தின் அளவு குறைந்து விடுகிறது. நார்ச்சத்து இல்லாத மாவுகளினால்,செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. ஆகவே, மாவு உணவில் இருந்து நீங்கள் நேரடியாக தானிய வகை உணவுகளுக்கு மாறுங்கள்.இது உங்கள் உடலுக்கு மட்டுமல்லாமல், இதயத்திற்கும்,செரிமான அமைப்பிற்கும் ஆகச் சிறந்த நன்மைகளை தரும்.
நீங்கள் உண்ணும் உப்பின் அளவை கட்டுப்படுத்துங்கள்:
நாளொன்றுக்கு சுமார் 2.3 கிராம் சோடியம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.அதாவது உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்,ரத்த அழுத்தமானது, அதிகரிக்கிறது.இது இதயத்திற்கு பிரச்சனைகளைத் தரும். இந்த ரத்த அழுத்தமானது, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆகவே உப்பை அளவோடு பயன்படுத்துங்கள்.
மிதமான உடற்பயிற்சி:
மிதமான நடைப்பயிற்சி,சைக்கிள் ஓட்டுதல்,யோகாசனம் மற்றும் நீச்சல் போன்ற பயிற்சிகளை உங்கள் வயதிற்கும் உங்கள் உடல் நிலைக்கும் ஏற்றவாறு மிதமான அளவில் தினமும் செய்து கொண்டு வருவது, உடலுக்கு ஆகச் சிறப்பான நன்மைகளை தரும்.இந்த உடற்பயிற்சியானது,அதிகப்படியான ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கும், ரத்தத்திற்கும் கொண்டு சேர்க்கும். இதனால் இதயமானது சீராகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். இது மட்டுமல்லாது நாள் முழுமைக்கும் உற்சாகத்துடனும்,ஆரோக்கியத்துடனும், நீங்கள் இருப்பதற்கு,இந்த உடற்பயிற்சியானது ஆகச்சிறந்த உதவிகளைச் செய்யும்.
இறைச்சிகளை தவிருங்கள் அல்லது குறைந்த கொழுப்புள்ள இறைச்சி எடுத்துக் கொள்ளுங்கள்:
கூடுமானவரை இறைச்சி உணவுகளை தவிர்ப்பது,நம் இதயத்திற்கு ஆகச்சிறந்த நன்மையை பயக்கும்.ஏனெனில் நமது உடலானது,சைவ உணவுகளை உண்ணும் அமைப்பிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை உங்களால் சைவ உணவிற்கு மாற முடியாவிட்டாலும் கூட மீன், முட்டையின் வெள்ளை கரு மற்றும் கோழி இறைச்சி ஆகிய,குறைந்த கொழுப்பும் நிறைந்த,புரதமும் உள்ள உணவுகளை உண்ணுங்கள். இப்படியாக,குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும் போதும் கூட, மிக கவனமாக இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் தேவைப்படும் கொழுப்பின் அளவு உள்ள உணவுகளை மட்டுமே, உட்கொள்ள வேண்டும்.நீங்கள் ஒருவேளை சைவமாக இருந்தால் பாலாடை கட்டிகள்,நெய் மற்றும் வெண்ணை போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது கூட,அன்றைய தினத்திற்கு தேவைப்படும் கொழுப்பின் அளவிற்கு மட்டுமே,இத்தகைய உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறாக உங்கள் இதயத்திற்கு அதிக தொந்தரவு தராத உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.