கோடை வந்தாச்சு.. கூடவே வியர்வை, பிசுபிசுப்பு, சோர்வு, வியர்க்குரு, வேனல் கட்டிகள் என எல்லாமே வந்துவிடும். ஆகையால் கோடையில் ஆரோக்கியத்தைப் பேணி குதூகலமாக இருக்க 4 டிப்ஸ்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.
கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரங்களில் 37டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்கிறது வானிலை மையம்.
இந்நிலையில் வெயிலை எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்:
1. எளிதான, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்
வெயில் காலம் வந்துவிட்டால் பிரியாணி, எண்ணெய் உணவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு சற்றே எளிமையான உணவுகளுக்கு மாறுங்கள். அதிக கார்போஹைட்ரேட், கொழுப்பு கொண்ட கடினமான உணவு உடலில் அதிக வெப்பத்தை உண்டாக்கும். காய்கறிகள், கனிகளை நாடுங்கள். அதுவும் ஆரஞ்சு, வாட்டர்மெலன், தக்காளி ஆகியனவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள். எளிதில் ஜீரனமாகும் உணவை உட்கொண்டால் வெயில் காலத்தில் குடல் சம்பந்தப்பட்ட நோய்களை பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
2. வெயிலின் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாவதை தவிர்க்கவும்
வெயில் கால வெப்பம் விதவிதமான சரும நோய்களுக்கு வழிவகுக்கலாம். அதனால் சன்ஸ்க்ரீன் லோஷன்களைப் பயன்படுத்தி சருமத்தைப் பாதுகாக்கவும். அதையும் தாண்டி எரிச்சல், அரிப்பு ஆகியன சருமத்தில் ஏற்பட்டால் உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணர்களை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
3. அதிகமாக தண்ணீர் குடிங்கள்:
இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் என்றாலும் கூட கோடைக்காலத்தில் மிக மிக அவசியமானது. நம் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியமாகிறது. தாகத்துடன் இருக்காதீர்கள். தண்ணீராகவே நிறைய அருந்த இயலவில்லை என்றால் மூலிகை தேநீர், ஐஸ்ட் டீ, தேங்காய் தண்ணீர், எலுமிச்சை, வெள்ளரி கலந்த தண்ணீர், ஆர்கானிக் தேநீர் ஆகியனவற்றை எடுத்துக் கொள்ளலாம். இளநீர் தவிர்க்கக் கூடாத பானம். நீர் மோர், நீர் ஆகாரத் தண்ணீரும் எளிதில் கிடைக்கும் கோடை சமாளிப்பு பானங்கள் ஆகும்.
4. சரியான ஓய்வு அவசியம்
கோடை காலஹ்தில் முறையான ஓய்வு அவசியம். கோடை கால நாட்கள் நீண்டதாக இருக்கும். அதனால் அயர்ச்சியும் அதிகமாகும். எனவே 7 முதல் 9 மணி நேரமாவது சீரான தூக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் எளிமையான உணவு அவசியம். அதுவும் இரவு வேளையில் எளிமையான உணவு மிக மிக அவசியம்.