அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை


இந்த இரண்டடிக் குறளுக்கு மிகப் பொருத்தமானவர் 21 வயது மொஹமத் சுமா. தெலங்கானாவின் மெகபூபாபாத்தை சேர்ந்த சுமா தனது 11 வயதிலிருந்து விலங்குகளை மீட்பதைத் தனது வாழ்நாள் பணியாகச் செய்துவருகிறார். அனுபவமிக்க விலங்குகள் மீட்பாளர்கள் கூட எட்டாத உயரம் இது.  
இதுவரை 120 விலங்குகளை மீட்டுள்ள சுமா, மீட்கப்பட்ட விலங்குகளைப் பராமரிக்கத் தனது வீட்டில் ஷெட் ஒன்றைக் கட்டியுள்ளார்,நரி, மலைப்பாம்பு என பல ஆபத்தான விலங்குகளையும் மீட்டுள்ளார். விலங்குகளை மீட்பதற்கு என்று எந்நேரமும் கால்களில் சக்கரம் கட்டிய கணக்காகவே சுழல்கிறார் சுமா. ஆபத்தில் சிக்கிய விலங்குகளை மீட்பது, காயம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதற்கு உடனடி முதலுதவியை அளிப்பது ஆகியவற்றைத் தான் சிறுமியாக இருந்த காலந்தொட்டுத் தொடர்ச்சியாக 10 வருடங்களாகச் செய்துவருகிறார் சுமா. குரங்கு, நாய்கள், பூனைகள், பசு மாடுகள், ஆந்தைகள் மற்றும் பறவைகள் உள்ளிட்டவற்றை இதுவரை மீட்டுள்ளார். 




இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக அண்மையில் ஒரு 40 அடி ஆழக்கிணற்றில் இறங்கி உயிருக்குப் போராடிய குள்ள நரியொன்றை மீட்டார் சுமா. மெகபூபாபாத்தின் வயல்வெளி ஒன்றில் உள்ள ஆழமான கிணற்றில் ஒரு சிறிய குள்ள நரி ஒன்று தவறி விழுந்தது. கிணற்றில் பரிதவித்த நரி தொடர்ந்து ஊளையிட்டபடியே இருந்தது. அச்சத்தின் காரணமாக கிராமமக்கள் எவரும் காப்பாற்ற முன்வராத நிலையில் சுமாவை அழைத்தனர். சற்றும் யோசிக்காமல் சிறிதும் தாமதிக்காமல் கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கிய சுமா நரியை அதன் வாலைப்பிடித்துத் தூக்கி மீட்டு வந்தார். துரதிர்ஷ்டவசமாக நரி இறந்துபோனது. காலை 10 மணி என்றாலும் இரவு 10 மணி என்றாலும் எந்நேரமும் விலங்குகளைக் காப்பாற்ற ரெடியாக இருக்கிறார் சுமா என்கின்றனர் ஊர்வாசிகள். 1962 என்கிற விலங்குகள் மீட்புக்கான அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்ததும் கயிறு, க்ளவுஸ், சாக்குப்பை சகிதம் குறிப்பிட்ட பகுதிக்கு கிளம்பிவிடுகிறார் சுமார். 


விலங்குகளை மீட்பதும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் குறித்த ஆர்வம் தனது பெற்றோர்களிடமிருந்து தனக்கு ஒட்டிக்கொண்டதாகச் சொல்கிறார் சுமா. 
‘நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது காயப்பட்ட ஒரு பன்றிக்குட்டியை மீட்டேன். இரவு நேரங்களில் மீட்பதற்கான அழைப்பு வந்தால் எனது அப்பாவும் மீட்புப்பணிக்கு என்னுடன் வருவார்’ என்கிறார் சுமா.
அவரின் இந்த மீட்புப்பணி ஆபத்தானதும் கூட அண்மையில் ஒரு மலைப்பாம்பை மீட்டெடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 2018ல் தனது தாயை இழந்த 6 பூனைக்குட்டிகளை மீட்ட சுமா அந்த ஆறு குட்டிகளுக்காக தனது வீட்டில் ஒரு சிறிய ஷெட் அமைத்தார்.அந்த ஷெட் இன்று சின்னஞ்சிறிய  உயிர்கள் பலவற்றுக்குப் புகலிடமாக இருக்கிறது. அன்பும் வீரம்தான். வீரமங்கைக்கு வாழ்த்துகள்!


Also read: தமிழ்நாட்டில் 4506 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் 15 பேர் உயிரிழப்பு!