நடிகர் ரஜினிக்கு மட்டும் அமெரிக்க செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி, அதற்கு பதிலும் கிடைத்துவிட்டதாக கூறிய நிலையில், யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கே அகமத் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் ‘அண்ணத்த’ படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு, சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் வழங்கினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விருப்பதாகவும், இதற்காக சிறப்பு தனி விமானமும் கோரியும் மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் சில தினங்களுக்கு அமெரிக்கா சென்றார். சமீபத்தில் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா உடன் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, இந்தியாவில் இருந்து யாரும் அமெரிக்கா வர அந்தநாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினிகாந்த் மட்டும் எப்படி அங்கு சென்றார் என்றும், உடல்நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு என்றும் பல கேள்விகளை எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிக்கு மட்டும் அமெரிக்க செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி, அதற்கு பதில் கிடைத்ததாக கூறினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் !’ எனப் பதிவிட்டார்.
இந்நிலையில், ரஜினி உடல் நலம் தொடர்பாக யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கே அகமத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை, எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Kamal Haasan Next Movie: எதிர்பார்ப்பே எகிறுதே.. வெற்றிமாறனுடன் கைகோக்கும் கமல்?