குடல் ஆரோக்கியம் என்பது செரிமான மண்டலத்தில் வாழும் நுண்ணுயிரிகளின் சமநிலை, சீரான செயல்பாடு ஆகியவற்றை குறிக்கிறது. இது செரிமானம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மோசமான குடல் ஆரோக்கியம் நாள்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் உடலில் பல்வேறு அறிகுறிகள் தெரியும். உங்கள் உடல் சொல்வதை கவனித்தால் அது தெரிய வரும். நாள்பட்ட சோர்வு, தூக்க கலக்கம், அடிக்கடி ஏற்படும் நோய்த்தொற்றுகள், மனநலப் பிரச்சினைகள் (கவலை, மனச்சோர்வு), சர்க்கரை, இனிப்பு அதிகமாக சாப்பிட வேண்டுமென்ற உணர்வு, பசி மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை அடங்கும். உங்களுக்கு மோசமான குடல் ஆரோக்கியம் இருப்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கான அறிகுறிகள் பற்றி மருத்துவர்கள் சொல்வதை காணலாம்.
செரிமான பிரச்சனைகள்:
வயிறு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற தொடர்ச்சியான அறிகுறிகள் குடல் ஆரோக்கியம் மோசமாக இருக்கிறது என்று பொருள். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் உணவுக்குப் பிறகு ஏற்படும் அல்லது நாள்பட்டதாக இருக்கலாம்.செரிமான மண்டலம் சீராக செயல்படவில்லை என்றால் மலச்சிக்கல், பசியின்மை, நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும்.
எதிர்பாராத உடல் எடை உயர்தல் / குறைதல்:
உணவு பழக்கவழக்கம் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லாமல் திடீர் உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைவது குடல் ஆரோக்கியமின்மையின் காரணமாக இருக்கலாம். குடல் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் உடல் எவ்வாறு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது, கொழுப்பைச் சேமிக்கிறது ஆகியவற்றை சீராக செயல்பட வைக்கும்.
சில உணவுகள் சாப்பிட்டல் உடல் ஏற்றுக்கொள்ளாது. குடல் ஆரோக்கியமாக இல்லையென்றாலும் சில உணவுகளை சாப்பிட முடியாது .
சரும பிரச்சனைகள்:
குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் சருமத்தில் அது பிரதிபலிக்கும். கொப்பளங்கள் உள்ளிட்டவைகள் ஏற்படும் அதோடு தீவிர சரும பிரச்சனைகளும் ஏற்படும்.
தூக்கமின்மை:
அதீத சோர்வு, தூக்கமின்மை, தூங்குவதில் சிரமம், நீண்ட நாட்களாக நீடிக்கும் தூக்க பிரச்சனை ஆகிய குடல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கான அறிகுறிகள். குடலில் உள்ள நுண்ணுயிரிகள் சீராக தூக்கம் வருவதற்கான நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை சரியாக செயல்பட வைக்க உதவும்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல்போவது:
குடல் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும்.
மனச்சோர்வு:
மனச்சோர்வு, கவலை, மூட் ஸ்விங்க்ஸ், மன உளைச்சல் உள்ளிட்டவைகள் ஏற்படலாம்.
சர்க்கரை உணவுகள் அதிகம் தேடும்:
குடல் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் இனிப்பு, சர்க்கரை பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
மோசமான சுவாசம்:
சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்படுதல் குடல் ஆரோக்கியம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.
செரிமான மண்டலம் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவைகள்
- பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.
- இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது நல்லது.
- புரோபயாடிக் உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- உணவில் போதுமான நார்ச்சத்துக்களை, குறிப்பாக தாவர வகை நார்ச்சத்து இருப்பது நல்லது.
- செரிமான மண்டலம் சீராக செயல்பட சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
- இஞ்சி, சீரகம், கொத்தமல்லி மற்றும் லவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது செரிமான திறனை மேம்படுத்த உதவும்.
- உணவு சாப்பிடும் முன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை ராக் சால்ட், இஞ்சி, கலந்து தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.
- உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவதும் உணவை ஜீரணிக்க உதவுகிறது.
- காலை உணவு மிக முக்கியமான உணவு. மேலும், இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.