இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு உடலால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை உடல் செல்களுக்கு அனுப்ப முடிவதில்லை என்பதையே காட்டுகிறது. இந்நிலை கண்டுக் கொள்ளப்படாமல் விடப்படும்போது அது நீரிழிவு நோயாக மாறுகிறது. இந்த டெக்னாலஜி யுகத்தில் உடற்பயிற்சிகள் இல்லாதது நீரிழிவு நோய்க்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.


நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையேல் நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும். நீரிழிவும் நோயும் அப்படியே. இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 


அறிகுறிகள்:


அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது பசிப்பது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, பெரும்பாலும் சோர்வான உணர்வு இருக்கும், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்,   காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை உள்ளிட்டவைகள் இவற்றின் அறிகுறிகளாக சொல்கிறது மருத்துவ உலகம்.


சிகிச்சை:


நீரிழிவு நோய்க்கான அறிகுகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துரை அணுகு அதை கண்டறிவது முக்கியம். இன்றைய மருத்துவ உலகில் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது.


டைப் 1, டைப் 2, gestational நீரிழிவு நோய் என வெவ்வேறானவை இருப்பதாக மருத்துவ உலகம் சொல்கிறது.


இந்த நோயினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை இக்கட்டுரையில் காணலாம்.


இதய பாதிப்பு:


சர்க்கரை நோய் / நீரிழ்வு நோய் பாதிப்புகள் இருந்தால் இதய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு, ஸ்ட்ரோக், உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் உடலில் சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். 


நரம்பு பாதிப்புகள்


இரத்தத்தில் அதிகளவிலான சர்க்கரை அளவு வெகு நாட்களாக கண்டுகொள்ளப்படாமல் இருந்தால், இரத்த நாளாங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதோடு சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. 


சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு


சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களில் நீரிழிவு / சர்க்கரை நோய் ஒன்று.உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். 


கண் பார்வை பாதிப்புகள்


நீரிழிவு/ சர்க்கரை நோயினால் கருவிழியில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். இதனால் கண் பார்வையில் குறைபாடு உருவாகும். பார்வை இழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.


சரும பாதிப்புகள்


தோலில் அரிப்பு கொப்புளங்களை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைத் தொற்றானது, நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.


கை, கால்விரல்களுக்கு இடையில் உள்ள தசை, நகங்கள், மார்பகங்களின் கீழ் உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் தொற்று ஏற்படலாம்.


அரிப்பு


நீரிழிவு நோயாளிகளை பாதிக்கும் பொதுவான தோல் பிரச்சனையாக அரிப்பு உள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி வறண்ட சருமம், மோசமான ரத்த ஓட்டம் மற்றும் நோய்த்தொற்றுகள் காரணமாக நீரிழிவு நோயாளிகளிடம் அரிப்பு ஏற்படுகிறது.


நோய் தொற்று ஏற்படுவதற்கான பாதிப்புகள்


சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பல்வேறு புதிய தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.


மனநலன் சார்ந்த பிரச்சனைகள்


இதனால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். மன அழுத்தம், மன சிதைவு ஏற்படும். 


 உடற்பயிற்சி:


ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும்.


கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்தல்:


அதிகளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. 


உடல் எடையை சீராக வைத்தல்:


ஆரோக்கியமான உடல் எடை, நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது. மற்றும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வைக்கிறது. 


நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்:


காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் சர்க்கரை செரிமானத்தையும் சர்க்கரையை உறிஞ்சுவதையும் மெதுவாக்குகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.


மன அழுத்தத்தைக் குறைத்தல்:


மன அழுத்தம் உடலில், குளுகோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே வழக்கமான உடல் பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.


போதுமான தண்ணீர் குடிப்பது:


தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் டிஹைட்ரேட் ஏற்படாமல் (நீரிழப்பு) தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது.


போதுமான தூக்கம்:


எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம் கார்டிசோலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.