ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற துாத்துக்குடி வாலிபர், திடீரென மாயமானதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.




தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர், வேலைக்காக கடந்த 22 ம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். பேங்காங் விமான நிலையம் சென்ற முத்துக்குமார், அங்கிருந்து வாட்ஸாப் மூலம் அவரது மனைவி சுந்தரிக்கு பேசியுள்ளார்.விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு மொபைல் சிம்கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். அங்கிருந்து கார் மூலம் ஹோட்டல் ரூமுக்கு சென்ற முத்துக்குமார், அதன் பின் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரது மனைவி சுந்தரியிடமும் பேசாமல் உள்ளார்.


முத்துக்குமாரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் கண்டுபிடிக்க முடியாததால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சுந்தரி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அர்மேனியா நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துக்குமார் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு என்று வந்த விளம்பரத்தை நம்பி DNC MASCOT CO LTD KINGDOM OF THAILAND என்ற நிறுவனத்திற்கு முத்துக்குமார் விண்ணப்பித்தார்.


அந்நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததை நம்பி முத்துக்குமார் தாய்லாந்து சென்றார். கடந்த 22 ம் தேதி பேங்காங்க் விமான நிலையத்தில் இறங்கினார். அதன் பின், காரில் ஹோட்டலுக்கு சென்ற அவர், நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும்  செல்வேன் என வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்டார்.அதுதான் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் இதுவரை இயலவில்லை. அவரது நிலை என்ன என தெரியாமல் பெண் குழந்தையுடன் தவித்து வருகிறேன். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து, முத்துக்குமாரின் குடும்பத்தினர் கூறும்போது, பேங்காங்க் விமான நிலையத்தில் இறங்கியதும் முத்துக்குமார் எடுத்த போட்டோ, விமான நிலையத்தில் புதிதாக வாங்கி சிம்கார்டு, அவர் ஹோட்டல் ரூமுக்கு செல்ல பயன்படுத்திய கார் எண் போன்ற விபரங்களை கலெக்டரிடம் அளித்துள்ளோம். இதுதொடர்பாக சென்னையில் உள்ள துாதரக அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளோம்.அவரை தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் அனைவரும் தவித்து வருகிறோம். ஆன்லைன் மூலம் வந்த விளம்பரம் என்பதால் எங்களுக்கு பயமாக உள்ளது. முத்துக்குமாரின் இருப்பிடம் குறித்த விபரம் தெரிந்தால் போதும். அவரை கண்டுபிடித்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்றனர்.


இந்நிலையில் முத்துக்குமார் குடும்பத்தினரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். முத்துக்குமாரை விரைவாக கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ் வலியுறுத்தியுள்ளார்