தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நடத்தத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பு வீரர் என 3,552 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் தமிழகம் முழுவதும் 295 மையங்களில் நடைபெற்றது.


தமிழ் மொழி, பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை எழுத 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 2,99, 820 பேர் மட்டுமே தேர்வு எழுத, 66,908 பேர் தேர்வை எழுதவில்லை.  அதாவது தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 81.76% பேர் தேர்வு எழுத, 18.24% பேர் தேர்வை எழுதவில்லை.


இந்நிலையில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் tnusrb.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் தங்களது தேர்ச்சி விவரங்களை அறியலாம். அந்த தளத்திற்குள் நுழைந்து பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம். இதையடுத்து, ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் விதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


 


மொத்தமுள்ள, 3,552 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 18,671 பேர் தேர்ச்சி பெற்று, உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதில், 15,158 பேர் ஆண்கள், 3,513 பேர் பெண்கள் ஆவர்.