தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு இன்று(09.06.2024) நடைபெற இருக்கிறது.
குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முறை பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். கடந்த மே 27-ம் தேதி இதற்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை
- விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னரே தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு உடன் வருகைதர வேண்டும்.
- காலை 09.00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், 12.45 மணிக்கு தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது.
- தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் சாதனங்கள் போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
- தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வருவது கூடுதல் சிறப்பு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர்கள் விலக்கி வைக்கப்படுவர்.
- தேர்வர்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தேர்வு எழுதும்போது கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.