டிஎன்பிஎஸ்சி  குரூப் 1 முதன்மை தேர்வில் இரண்டாயிரத்து 113 பேர் பங்கேற்க உள்ளனர். 


குரூப் 1 முதன்மை தேர்வு:


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.


தேர்வு எழுதும் 2,113 பேர்:


 குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜுலை மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதனை டொடர்ந்து, முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்காக சென்னையில் மட்டும் 22 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளமான https://www.tnpsc.gov.in/ இல் பதிவிறக்கம் செய்யலாம்.


தேர்வு முறை:


TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வில் 3 தாள்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேர தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்காணல் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அந்த தேர்வில் தேர்வாளர்களுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். 


நேரக்கட்டுப்பாடு:



  • விண்ணப்பதாரர் தேர்வு நடைபெறும் இடத்தில் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே தவறாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • மேசையில் ஒட்டப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தை சரிபார்த்த பின், தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். OMR  விடைத்தாள்களை நிரப்புவது தொடர்பான வழிமுறைகள் தேர்வுக் கூடத்தில்  வழங்கப்படும்.

  • தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடத்தில், ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சேர்க்கைக்கான மெமோராண்டத்துடன் (ஹால் டிக்கெட்) ஆஜராக வேண்டும், தவறினால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை / வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் புகைப்பட நகலையும் கொண்டு வர வேண்டும்.


டி.என்.பிஎஸ்.சி., அறிக்கை:


தேர்வு தொடர்பாக சில தினங்களுக்கு முன்பாக டி.என்.பிஎஸ்.சி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 16/2022, நாள் 21.07.2022 - இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-I) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 முற்பகல்) வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.


தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.