TNPSC Govt Job: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 709 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, வரும் 27ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
709 உதவி பொறியாளர் பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உதவி பொறியாளர் (அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதலாக 94 காலிப்பணியிடங்களும் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தனது மற்றொரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்?
விருப்பமுள்ள தேர்வர்கள் 27.5.2025 முதல் 25.6.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். தேர்வு 4.8.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும். பொறியியல் மற்றும் எம்எஸ்சியில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வு இன்றி எழுத்துத் தேர்வு முறையின் மூலம் மட்டுமே இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு முறையும், பாடப்பிரிவுகளும் மாறுபடுகிறது.பல்வேறு ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டியுள்ளதால், கூடுதல் விவரங்களுக்கு TNPSC.Gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை அணுகலாம்.
தகுதி விவரங்கள்:
கல்வி தகுதி பணியிடத்திகு ஏற்ப மாறுபடுகிறது. அதேபோன்று வயது வரம்பும் 21 வயது முதல் 30 வயது வரை வேறுபடுகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் விளக்கம் உள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது. துல்லியமான விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
காலிப்பணியிட விவரங்கள்:
தமிழ்நாடு வாட்டர் சப்ளை & ட்ரெய்னேஜ் போர்ட், சென்னை மெடோபொலிடன் டெவலப்மெண்ட் அதாரிட்டி, இந்து சமய அறநிலையத்துறை, விவசாய பொறியியல், எலெக்ட்ரிகல் இன்ஸ்பெக்டோரேட், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலை, நீராதாரம், தொழிற்சாலை பாதுகாப்பு & உடல்நலன், மீன்வளத்துறை, கடல்வளம், மாசு கட்டுப்பாடு, ஊரக வளர்ச்சித்துறை, ஆராய்ச்சி மேம்பாடு, கால்நடைத்துறை, ஃபாரன்சிக் ஆய்வகம், நகர வளர்ச்சித்துறை, நகர ஆற்றல் வளர்ச்சி, மாநில தொழில்துறை மேம்பாடு, சட்டம், உணவு வழங்கல், தமிழ் வளர்ச்சித்துறை, கனிமவளம், சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன், உணவு பாதுகாப்பு, மாக்னேசைட் லிமிடெட், நகர வாழ்விட வளர்ச்சி, பொருளாதாரம் & புள்ளியல், கல்வி ஆராய்ச்சி, பொது சுகாதாரம், வனத்துறை ஆகிய பிரிவுகளில் உள்ள 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் தான் நிரப்பபப்ட உள்ளன.
டிஎன்பிஎஸ்சி விளக்கம்:
டிஎன்பிஎஸ்சி அறிக்கையில், “ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025.2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும். எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் 94 இணைக்கப்பட்டுள்ளன.