1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்பட உள்ளது என்றும் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 


அதேபோல 2020ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வெளியான அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதால், அப்போது விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 


நவம்பர் மாதத்தில் இவர்களுக்கான கணினிவழி / எழுத்துத் தேர்வு நடைபெறும். 


விண்ணப்பக் கட்டணம்


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்தித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்சி அருந்ததியர் மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும். 


தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 


கல்வித் தகுதி


எம்பிபிஎஸ் படிப்பு.
மெட்ராஸ் மெடிக்கல் பதிவுச் சட்டம், 1914-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளராக இருக்க வேண்டும்.
பயிற்சி மருத்துவராகக் குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும். 
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 


தேர்வு முறை


தமிழ் மொழி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு 1 மணி நேரத்துக்கு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் அனைத்துப் பிரினரும் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயம். அப்போதுதான் மருத்துவத் தேர்வுக்கான தாள் திருத்தப்படும். 


கணினி வழித் தேர்வு / எழுத்துத் தேர்வு 2 மணி நேரங்களுக்கு நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். எஸ்சி/ எஸ்சி அருந்ததியர் / எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் போதும். 


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
* முகப்புப் பக்கத்தில் Online Registration என்ற தெரிவை க்ளிக் செய்யவும். 
* Assistant Surgeon (General) என்ற பதவியை க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம்.
* மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும். அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும். * வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்ற வேண்டியது அவசியம். இல்லையெனில் விண்ணப்பம் முழுமை பெற்றதாகக் கருதப்படாது. 


கூடுதல் விவரங்களுக்கு: http://mrb.tn.gov.in