டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சமர்பிப்பிற்கு, இன்னும் 10 நாட்களே உள்ளது.
குரூப் 4 தேர்வு:
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், 20,36,774 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இதனை தொடர்ந்து, காலி பணியிடங்களின் எண்ணிக்கையும்,மேலும் 559 உயர்த்தப்பட்டது.இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் வெளியாவது இதுவே முதல்முறையாகவும் பார்க்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு:
இந்நிலையில்தான் இணையம் வழியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆவண சமர்பிப்பானது நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஆவண சமர்பிப்புக்கான கடைசி தேதியான, வரும் 21ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், விரைவில் சான்றிதழை சமர்பிக்கவும். கடைசி நேரங்களில், இணையதளத்தின் செயல்படும் வேகம் குறையலாம். ஆகவே முன்கூட்டியே சமர்பிப்பது நல்லது.
சான்றிதழ் ஏற்கப்படாது:
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தட்டச்சு / சுருக்கெழுத்து சான்றிதழில் தேர்வு முடிவுகள் வெளியிட்ட தேதி அறிவிக்கை தேதிக்குப் பின்னால் இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதிரடி காட்டும் டி.என்.பி.எஸ்.சி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளானது, தாமதமாக வெளியாகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், சமீபத்திய தேர்வுகளின் முடிவுகளை வேகமாக வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறது. மேலும், அடுத்த நடைபெறக்கூடிய தேர்வுகள் குறித்தான கால அட்டவணையும் வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி அதிரடி காட்டியது . இதற்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( ( டிஎன்பிஎஸ்சி ) சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் குரூப் 1, 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கைகள், தேர்வு தேதிகள், பிற தேர்வுகள் விவரம், தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு குறித்த பல்வேறு அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.