தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நவம்பரில் நில அளவையர் மற்றும் வரைவாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தேர்வுமையத்தினைச் சேர்ந்த 700 பேர் தேர்வாகி உள்ளனர். ஒரே மையத்தில் இருந்து 700 பேர் தேர்வாகியுள்ளது தேர்வர்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மையத்தில் இருந்து மட்டும் அதிக அளவில் தேர்வாகியுள்ளதால், முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட த.நா.அ.ப.தே (#TNPSC) போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது.
வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்!
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.
நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.