நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் பணி இடங்கள் காலியாக இருப்பதாகவும் 500-க்கும் அதிகமான ஐபிஎஸ் இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’ஜனவரி 1, 2024 நிலவரப்படி இந்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையான 6,858 ஐஏஎஸ்களில், 5,542 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் பணியில் உள்ளனர். மொத்தம் அனுமதிக்கப்பட்ட 5,055 ஐபிஎஸ் அதிகாரிகளில், 4,469 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
காலியாக உள்ள 1,316 ஐ.ஏ.எஸ். பணியிடங்களில், 794 பணியிடங்கள் நேரடியாகவும், 522 பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகும். அதேபோல காலியாக உள்ள 586 ஐ.பி.எஸ்., பணியிடங்களில், 209 பணியிடங்கள் நேரடியாகவும், 377 இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட வேண்டியவை.
இந்திய வனத்துறையில் எப்படி?
அதேபோல வனத் துறையில், அனுமதிக்கப்பட்ட நிலையில் 3,193 இந்திய வனப் பணி (IFS) அதிகாரிகள் உள்ள நிலையில், 2,151 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு உள்ளன. மீதம் 1,042 ஐஎஃப்எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 503 இடங்கள் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட வேண்டியவை. மீதமுள்ள 539 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டியவை ஆகும்.
சமூக வாரியாக நிரப்பப்பட்ட காலியிட விவரம்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் சமூக வாரியாக நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2022 சிவில் சர்வீசஸ் தேர்வில் 75 பொது, 45 ஓபிசி, 29 எஸ்சி மற்றும் 13 எஸ்டி பணி நியமனங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் செய்யப்பட்டன.
இதே காலத்தில் ஐபிஎஸ் பணிக்கு, 83 பொது, 53 ஓபிசி, 31 எஸ்சி, 13 எஸ்டி என சமூக வாரியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் IFS பணிகளில் மொத்தம் 43 பொது, 51 ஓபிசி, 22 எஸ்சி மற்றும் 11 எஸ்டி நியமனங்கள் செய்யப்பட்டன’’.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?