இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தும் வருகிறது. அதிலும் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கவும் வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க அரசின் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கான பயிற்சியும் வழங்கி கடன் உதவி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச கார் ஓட்டுனர் பயிற்சி
இதே போல தனியார் நிறுவனங்களும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பயிற்சியானது வழங்கி வருகிறது. அதன் படி, கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக கார் ஓட்டுனர் (LMV Driver Training) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க எந்த வித கட்டணமாக வசூலிக்காமல் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகின்ற 30-12-2025 முதல் 07-02-2026 வரை 30-நாட்கள் நடைபெற உள்ளது.
உணவு, சீருடை இலவசம்
இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும், பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-வயதிற்கு மேல் 45-வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலவச ஓட்டுநர் பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவும், முன்பதிவு செய்வதற்கான எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. 8778323213 7200650604 0424-2400338
முகவரிகனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அரசினர் பொறியியல் கல்லூரி(IRTT) Road, வாசவி காலேஜ் அருகில்,சித்தோடு, ஈரோடு.
இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
நாளுக்கு நாள் போக்குவரத்து சேவைகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொந்தமாக கார் வாங்கி முன்னேறும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு உதவியாக இருக்கும். எனவே இளைஞர்களுக்கு இந்த பயிற்சியின் மூலம் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ஓட்டுநர் பயிற்சி பெற்ற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.