இந்திய பாதுகாப்பு துறையின் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்னிபத் என்ற திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது பல இளைஞர்களின், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த பலரின் கனவாக உள்ளது. இதற்காக பல முயற்சிகள் எடுத்தாலும் வாய்ப்புகள் கிடைக்காமல் கவலைப்படுபவர்களுக்கு அக்னிபத் என்ற திட்டம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதிகப்படியான இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 






ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்கள் இதில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இவர்கள் 4 ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீர் என அழைக்கப்படும் இந்த வீரர்களுக்கு சம்பளம், இதர படி என அனைத்து வழங்கப்படும். குறைந்தது 17 வயது முதல் அதிகப்பட்சமாக 21 வயது வரையுள்ள இளைஞர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள். 


அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு இதில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்பின் இந்த பேட்ச்சில் இருந்து 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 ஆண்டுகால பணிக்கு பின் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் சேவா நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது. 


முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000( பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33 ஆயிரம் (பிடித்தம் போக ரூ.23,100), 3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (பிடித்தம் போக ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 (பிடித்தம் போக ரூ.28,000) வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் ரூ.5.02 லட்சம் சேவா நிதிக்கு செல்லும். அதே அளவு நிதியை  மத்திய அரசும் செலுத்தும். இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது இராணுவத்தில் சேர நினைக்கும் தகுதியுடைய இளைஞர்கள் மறக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண