மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்குத் தமிழக அரசின் வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் திட்டத்தின் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விளக்கியுள்ளார்.

Continues below advertisement

யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 31.03.2026 அன்றைய தேதியில் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்;

பொதுப்பிரிவினர்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், முறையாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் தகுதியுடையவர் ஆவர்.

Continues below advertisement

மாற்றுத்திறனாளிகள்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.03.2026 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்திருந்தால் போதுமானது. இவர்களுக்கு வருமானம் மற்றும் வயது வரம்பில் எவ்வித உச்ச வரம்பும் கிடையாது.

உதவித்தொகை விபரங்கள்

பயனாளிகளின் கல்வித் தகுதிக்கேற்ப உதவித்தொகை மாறுபடும். இத்தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

1. பொதுப்பிரிவினருக்கான (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை)

* 10-ம் வகுப்பு தோல்வி: மாதம் ரூ. 200

* 10-ம் வகுப்பு தேர்ச்சி: மாதம் ரூ. 300

* மேல்நிலை வகுப்பு (HSC) தேர்ச்சி: மாதம் ரூ. 400

* பட்டப்படிப்பு தேர்ச்சி: மாதம் ரூ. 600

2.மாற்றுத்திறனாளிகளுக்கான (ஒவ்வொரு மாதமும்):

* 10-ம் வகுப்பு தோல்வி/தேர்ச்சி: ரூ. 600

* மேல்நிலை வகுப்பு (HSC) தேர்ச்சி: ரூ. 750

* பட்டப்படிப்பு தேர்ச்சி: ரூ. 1000

முக்கிய நிபந்தனைகள்

வயது வரம்பு: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி நிலை: விண்ணப்பதாரர் தற்போது எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது.

தகுதியற்றவர்கள்: ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள், பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில்முறைப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

பிற திட்டங்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அல்லது அரசின் இதர உதவித்தொகை திட்டங்களில் பயன்பெறுபவர்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை.

கடந்த காலச் சாதனைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 39 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 187 பொதுப்பிரிவு பயனாளிகள் என மொத்தம் 226 பேருக்கு ரூ. 16,90,550 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள பதிவுதாரர்கள் கீழ்க்கண்ட அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் நேரில் வர வேண்டும்:

* வேலைவாய்ப்பு அடையாள அட்டை

* மதிப்பெண் சான்றிதழ்கள்

* மாற்றுச்சான்றிதழ் (TC)

* குடும்ப அட்டை, அடையாள

* அட்டை (Aadhaar)

* வங்கி கணக்கு புத்தகம்  

* சாதிச்சான்றிதழ்

விண்ணப்பத்தைப் பெற: மயிலாடுதுறை பாலாஜி நகர், பூம்புகார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.htmlஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்பவர்கள் 04364-299790 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு உரிய அறிவுரைகளைப் பெறுவது அவசியம்.

காலக்கெடு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.05.2026 வரை அல்லது 01.07.2026 முதல் 28.08.2026 வரை அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.