இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் சூழலில் அது நாளுக்கு நாள் புது உருவங்களைப் பெற்று வருகிறது.
படித்த படிப்புக்கு, தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்கள் விரக்தியில் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள் எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை.
சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எகானமி பிரைவேட் (Centre for Monitoring Indian Economy Pvt) என்ற மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் இந்த கணிப்பை மேற்கொண்டுள்ளது.
அந்த கருத்துக் கணிப்பின்படி 2017 ஆம் அண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த வேலையாட்கள் பங்களிப்பு என்பது 46%ல் இருந்து 40% ஆகக் குறைந்துள்ளது. அதுவும் பெண் பணியாட்கள் நிலவரம் இன்னும் மோசமாக உள்ளது. மொத்த பணியாட்கள் பலத்திலிருந்து 21 மில்லியன் பேர் மாயமாகிவிட்டனர். ஆம் இனி வேலை தேடப்போவதில்லை என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திய அளவில் வேலைவாய்ப்பு பெறத் தகுதியானவர்களில் மொத்தம் 9% பேர் மட்டுமே இன்னும் தங்களுக்கான பணிகளைத் தேடி வருகின்றன.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி வேலை செய்ய தகுதி கொண்ட 90 கோடி பேர் அதாவது அமெரிக்கா, ரஷ்யாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி அளவிலான இந்திய மக்கள் வேலையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் எனக் கூறுகிறது.
இளைய சமுதாயம் அளிக்கும் பங்களிப்பை அறுவடை செய்துகொள்ள இந்தியா தயாராக இல்லை என்று இந்திய இளைஞர்கள் நினைக்கின்றனர் என்று பொருளாதார நிபுணரான குணால் குண்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் தொகையில் 15; இருந்து 64 வயதுடையோரின் எண்ணிக்கை 3ல் 2 என்று இருக்கும் நிலையில் வேலைக்கான போட்டி அதிகமாகவே இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பணியை செய்யவில்லை என்பதே பெரும்பாலோனோரின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களின் கனவைப் பூர்த்தி செய்ய 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 9 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கணித்துள்ளது மெக்கின்சே குளோபல் இன்ஸ்டிட்டியூட். இது நடந்தால் ஆண்டு ஜிடிபி 8% முதல் 8.5% ஆக வளர்ச்சி காணும்.
இளம் சமூகத்தினருக்கு தேவையான வேலை வாய்ப்பை சரியாக உருவாக்கிக் கொடுக்காவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகும் அந்தஸ்தில் பின்னடைவைக் காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் வயது ஏறும், வளம் ஏறாது. அவர்கள் பணம் படைத்தவர்கள் ஆகும் விகிதம் சரியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்து எச்சரித்துள்ளனர்.
பெண்கள் புறக்கணிப்பு ஏன்?
வேலை தேடுவதை பெண்கள் புறக்கணிக்கக் காரணம், அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் பலவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும், பாதுகாப்பை உறுதி செய்யாததாகவும் இருப்பதே எனக் கூறுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் 49% பெண்கள். அவர்களில் 18% பேர் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றனர். இது சர்வதேச சராசரியில் பாதியளவே என்று கூறப்படுகிறது.